கஜா புயல் நிவாரணப் பணிக்காக 120 பணியாளர்கள் நாகை பயணம்

கஜா புயல் நிவாரணப் பணிக்காக திருவள்ளூரில் இருந்து நாகை மாவட்டத்துக்கு 120 பணியாளர்களை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஞாயிற்றுக்கிழமை


கஜா புயல் நிவாரணப் பணிக்காக திருவள்ளூரில் இருந்து நாகை மாவட்டத்துக்கு 120 பணியாளர்களை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஞாயிற்றுக்கிழமை வழியனுப்பி வைத்தார்.
நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட 6 மாவட்டங்களில் கஜா புயல் வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்து ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல் செல்லிடப்பேசி கோபுரங்கள் சாலையில் சாய்ந்து கிடப்பதால் தகவல் தொடர்பு இல்லாத நிலை உள்ளது. மேலும், அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாமல் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
இதனால் உணவு, குடிநீருக்கும் வழியின்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முறிந்த மரங்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகளில் பல்வேறு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மின் வாரிய பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மரங்களை அகற்றும் பணியாளர்களை அனுப்பி வைத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருவேற்காடு, ஆவடி ஆகிய நகராட்சிகளில் இருந்து துப்புரவுப் பணியாளர்கள், கட்டிங் இயந்திரம் மூலம் மரம் அகற்றும் தொழிலாளர்கள், ஜெனரேட்டர் ஆபரேட்டர்கள், மின் கம்பம் நடும் தொழிலாளர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 120 பேரை நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக நாகை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது, பயணம் மேற்கொள்ளும் பணியாளர்களிடையே ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பேசியது: கஜா புயலால் நாகை உள்பட 6 மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளதால், அடிப்படை வசதியின்றி அன்றாடப் பணிகள் முடங்கியுள்ளன. எனவே, இப்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக செல்லும் தொழிலாளர்கள் இப்பணியை மனநிறைவோடு நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் துப்புரவுப் பணிகளில் ஈடுபட வேண்டும் என அவர் அறிவுரை கூறி வழியனுப்பி வைத்தார்.
நிகழ்வில், நகராட்சி ஆணையாளர் முருகேசன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் கோவிந்தராஜ், சுகாதார அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com