குப்பை அள்ள நவீன பேட்டரி வாகனங்கள்: அமைச்சர் வழங்கினார்

திருவேற்காடு நகராட்சியில் வீடுகள் தோறும் எளிதாக குப்பைகள் சேகரிக்கும் வகையில் ரூ.33.80 லட்சம் மதிப்பிலான 20 நவீன பேட்டரி வாகனங்களை தமிழ் வளர்ச்சி, மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்


திருவேற்காடு நகராட்சியில் வீடுகள் தோறும் எளிதாக குப்பைகள் சேகரிக்கும் வகையில் ரூ.33.80 லட்சம் மதிப்பிலான 20 நவீன பேட்டரி வாகனங்களை தமிழ் வளர்ச்சி, மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை வழங்கினார்.
திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், வீடுகள் தோறும் மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்க மின்சாரம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார்.
இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று மின்சாரம் மூலம் இயங்கும் 20 வாகனங்களை வழங்கினார். நிகழ்வில், அவர் பேசியது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு தேர்வு நிலை நகராட்சியாகும்.
இதன் பரப்பளவு 28.50 சதுர கிலோ மீட்டராகும். கடந்த 2017-இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இங்கு 22 ஆயிரத்து 191 குடியிருப்புகளும், 624 வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. திருவேற்காட்டில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில், 89,164 பேர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள நகராட்சி மூலம் 18 நிரந்தரப் பணியாளர்களும், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 192 பணியாளர்களும் என மொத்தம் 210 பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் வீடுவீடாகச் சென்று. மக்கும்-மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து பெற்று வருகின்றனர். தற்போதைய நிலையில் 49 மூன்று சக்கர வாகனங்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு தரம் பிரித்து வாங்கப்படும் குப்பைகளில் உள்ள மக்கும் கழிவுகளை, நகரில் ஏழு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை உரக்குடில்களில் இட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத கழிவுகளில் இருந்து மறு சுழற்சிக்கான பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருள்களில் இருந்து கிடைக்கும் தொகை, அனைத்து துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் பிரித்து வழங்கப்படுகிறது. மறு சுழற்சி செய்ய இயலாத பொருள்களை அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு எரிபொருள் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது, முதல் கட்டமாக இந்த நகராட்சியை மேம்படுத்தும் வகையில் குப்பைகளை அள்ளுவதற்காக, பேட்டரி மூலம் இயங்கும் நவீன வாகனங்களை தலா ரூ.1.69 லட்சம் மதிப்பில் 20 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 13 வாகனங்கள் மற்றும் 7 சிறிய இயந்திர வாகனங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று நவீன வாகனங்களைப் பயன்படுத்துவதால் துப்புரவுப் பணியாளர்களின் பணித் திறனும், தரமும் உயர்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், திருவேற்காடு நகராட்சி ஆணையர் எஸ்.சித்ரா, பூந்தமல்லி வட்டாட்சியர் புனிதவதி, நகராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com