கஜா புயல் பாதிப்பு: ரூ.20.40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் வருவாய்த்துறை மற்றும் உணவு வழங்கல் 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் வருவாய்த்துறை மற்றும் உணவு வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் முதல் கட்டமாக ரூ.20.40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை பல்வேறு வாகனங்களில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அனுப்பி வைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.  
நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கஜா புயல் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவு, குடிநீருக்கு அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
தற்போதைய நிலையில் அப்பகுதியில் சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் உள்ளிட்டவைகளை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தங்களால் இயன்ற அத்தியாவசியப் பொருள்களை தாராளமாக வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டிருந்தார்.   
இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் உணவு வழங்கல் துறை, வருவாய்த்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பொருள்களை லாரிகளில் ஏற்றி அனுப்பி வருகின்றனர். இதேபோல், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் நிவாரணப் பொருள்களை அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலர்கள் சங்கம் சார்பில், அந்தந்த அதிகாரிகள் மூலம் நிவாரணப் பொருள்களை சேகரித்தனர்.  
இதில் உணவுப் பொருள்கள், அரிசி மூட்டைகள், துணி வகைகள், மருந்து வகைகள், நாப்கின்கள், குடிநீர் பாட்டில்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட ரூ.20.40 லட்சம் மதிப்பிலான 20 டன் அத்தியாவசியப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. 
இவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும்  திங்கள்கிழமை இரவு ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, அப்பொருள்கள் அனைத்தும் அடங்கிய 3 லாரிகளை நாகை மாவட்டத்திற்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அனுப்பி வைத்தார்.  
இது தொடர்பாக ஆட்சியர் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து முதல் கட்டமாக நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு  தரப்பைச் சேர்ந்தவர்கள்  நிவாரணப் பொருள்களை அளிக்க முன்வந்துள்ளனர். அப்பொருள்களையும் சேகரித்து நாகை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தற்போதைய நிலையில் நிவாரணப் பொருள்கள் ஏற்றிய லாரிகளில் அதிகாரிகளும் உடன் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ச.சா.குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், சார் ஆட்சியர் ரத்னா, அலுவலக மேலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com