செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

நல்லறத்தை வளர்க்கும் போட்டி: வென்றவர்களுக்குப் பரிசு

DIN | Published: 12th September 2018 01:16 AM

திருவள்ளூர் கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயாவில் பாரதியார், காந்தி, விவேகானந்தர் ஆகியோர் தினத்தை முன்னிட்டு, நல்லறத்தை வழங்கும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
செப்டம்பர் 11-ஆம் தேதியானது பாரதியார் நினைவு நாள், மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக சத்தியாகிரகப் போராட்டம் நடத்திய நாள், விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் இந்து மத சிறப்பை உலக அளவில் நிலை நிறுத்திய நாள் ஆகும். இந்த நாளை முன்னிட்டு, அவர்கள் கடைப்பிடித்த உயர் சிந்தனைகளையும், வாழ்வியல் நிகழ்வுகளையும் போட்டிக்கான தலைப்புகளாக்கி, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் 6, 7, 8 வகுப்புகள் வரையிலும், 9, 10 மற்றும் 11, 12 வகுப்புகளுக்கும் என மூன்று பிரிவுகளாக பேச்சு, கவிதை, கட்டுரை, வினாடி வினா மற்றும் ஓவியப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இதில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 400 பேர் பங்கேற்றனர். 
இந்நிலையில், போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சேவாலயாவில் உள்ள பாரதியார் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சேவாலயா அறக்கட்டளை நிர்வாகி முரளிதரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி துணிப்பைகளை வழங்கினார்.
 இதில், வருவாய் ஆய்வாளர் ஜெயதேவி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜி.புகழேந்தி (நத்தமேடு), கேசவன்(மேலக்கொண்டையார்), 
எம்.ராதிகா (புலியூர்) உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.
 

More from the section

ரூ.3 லட்சம் நிவாரணப் பொருள்களை வழங்கிய ஆசிரியர்கள்
அமமுகவினர்  நிலவேம்பு குடிநீர் வழங்கல்
கஜா புயல் பாதிப்பு: ரூ.20.40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு
குப்பை அள்ள நவீன பேட்டரி வாகனங்கள்: அமைச்சர் வழங்கினார்
கஜா புயல் நிவாரணப் பணிக்காக 120 பணியாளர்கள் நாகை பயணம்