திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

மின்கசிவால் குடிசை வீடு எரிந்து நாசம்: எம்எல்ஏ நேரில் ஆறுதல்

DIN | Published: 12th September 2018 01:15 AM

மேட்டுக்காலனி கிராமத்தில் மின்கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில் பாதிக்கப்பட்டவர்களை திருத்தணி எம்எல்ஏ செவ்வாய்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, வேட்டி சேலைகளை வழங்கினார்.
திருத்தணி தாலுக்கா, திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உள்பட்டது நெமிலி ஊராட்சி. அங்குள்ள மேட்டுக்காலனி கக்கன்ஜி நகரில் ஜெயராஜ் - வனிதா தம்பதி குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், அவர்களின் குடிசை வீடு செவ்வாய்க்கிழமை மதியம் தீப்பிடித்தது. அப்போது வீட்டில் இருந்த வனிதாவும், ஜெயராஜும் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்து அக்கம்பக்கத்தினரை அழைத்து தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.
அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். தகவலறிந்த திருத்தணி எம்எல்ஏ பி.எம். நரசிம்மன், சம்பவ இடத்துக்கு வந்து, தீப்பிடித்து எரிந்த குடிசை வீட்டைப் பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட தம்பதிக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் புதிய வீடு வழங்க ஆவன செய்வதாக உறுதியளித்தார். மேலும், அவர்களுக்கு அரிசி, வேட்டி, சேலைகள், போர்வை ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது, அரசு வழக்குரைஞர் டி.ராஜபாண்டியன், மாவட்ட அதிமுக மாணவரணித் தலைவர் கு.பிரவீண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

More from the section

கஜா புயல் நிவாரணப் பணிக்காக 120 பணியாளர்கள் நாகை பயணம்
குப்பை அள்ள நவீன பேட்டரி வாகனங்கள்: அமைச்சர் வழங்கினார்
பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வுக் கூட்டம்
இலவச மருத்துவ முகாம்
பசுமைத் தாயகம் அமைப்பினர் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு