வேலைவாய்ப்பு அலுவலகங்களில்  நவீன வசதியுடன் தொழில் வழிகாட்டி மையம்: தலா ரூ.50 லட்சத்தில் அமைக்க நடவடிக்கை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அனைத்து தகவல்களையும் பெறும் வகையில்  ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன கணிப்பொறி வசதியுடன் தொழில் வழிகாட்டி மையம் அமைக்கப்படவுள்ளதாக வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
89 லட்சம் பேர் பதிவு : மாநில அளவில் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் பல்வேறு நலத்திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 89 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கின்றனர். 
 தற்போதைய சூழ்நிலையில் அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்கள் குறித்து பொதுமக்கள் அனைவருக்கும் அறிவிப்பு செய்ய வேண்டும்.  பின்னர் விண்ணப்பங்களை வரவேற்று, நேர்முகத்தேர்வு நடத்தியே பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என ஏற்கெனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
 தற்போது, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள  பட்டதாரிகள் மற்றும் பிளஸ் 2 கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்புக்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
போட்டித் தேர்வுக்கு பயிற்சி: அதனால், படித்த இளைஞர்களுக்கு தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் தொழில் திறன்களை வளர்த்து கொள்ளும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும், இந்திய ஆட்சிப்பணி, தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (குரூப்-1,2,3,4 தேர்வுகள்), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப்பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வாணையம் போன்றவை நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மையங்களில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் படித்து பயன்பெற்று வருகின்றனர்.
ரூ.50 லட்சத்தில் பணிகள்: இந்நிலையில், ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்தி, மாதிரி தொழில் வழிகாட்டி மையம் அமைக்க மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு மையத்தையும் ரூ.50 லட்சத்தில் நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போது கூடுதலாக தொழில் வழிகாட்டி மையம் அமைக்கப்பட இருப்பதால் இது இளைஞர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   
60 பேர் அமரும் நவீன டிஜிட்டல் வகுப்பறை.....: இது குறித்து வேலைவாய்ப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்காக என்னென்ன திறமைகளை இளைஞர்களிடம் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப தொழில் திறன் பயிற்சி அளித்து அவர்களைத் தயார்ப்படுத்துவது தொழில் வழிகாட்டி பயிற்சி மையத்தின் முக்கிய நோக்கமாகும். 
அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் 107 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களை தேர்வு செய்ததில், தமிழகத்தில் சென்னை, வேலூர், கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு மாதிரி தொழில் வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டது. 
அதேபோல், நிகழாண்டில் அகில இந்திய அளவில் 100 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரை, ஈரோடு, நீலகிரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனவே, அதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டதும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 
   இதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும் 60 பேர் அமரும் வகையில் தனி வளாகம், ஆன்லைன் வசதியுடன் அகன்ற தொடுதிரை, கணிப்பொறிகள், டிஜிட்டல் முறையில் அனைத்து தேர்வாணையத்தின் புத்தகங்களும் கணிப்பொறியில் பதிவு செய்யும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும். 
அதோடு, சர்வதேச அளவில் பல்வேறு தொழில் நிறுவனங்களும், இந்த மையத்தில் ஒருங்கிணைக்கப்படுவதால் அங்குள்ள காலிப்பணியிட விவரங்களையும் நாம் உடனடியாக அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com