சுற்றுச்சூழல் மாசு இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: அதிகாரிகளிடம் ஆட்சியர் வலியுறுத்தல்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்த்து, சுற்றுச்சூழல் மாசு இல்லாத மாவட்டமாக மாற்ற

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்த்து, சுற்றுச்சூழல் மாசு இல்லாத மாவட்டமாக மாற்ற அதிகாரிகள் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வலியுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பேசியது: ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதுபோன்றவற்றைத் தவிர்த்து பாதுகாப்பு விழிப்புணர்வை மேற்கொள்ளும் நோக்கத்திலேயே அனைத்துத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், எந்த வகையான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும், எவ்வகையான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தலாம் என்றும் விளக்கும் வகையில் படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விளக்கமும் அளிக்கப்படவுள்ளது.
இதில், தடை செய்த பிளாஸ்டிக் பொருள்களான, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் நெகிழித் தாள், நெகிழியாலான தெர்மாக்கோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழிப் பைகள், பொட்டலங்கள், நெகிழியாலான உறிஞ்சு குழல்கள், நெகிழிக் கொடிகள், நெய்யாத நெகிழிப் பைகள் (கனமாக இருப்பினும்) ஆகிய பொருள்கள் பயன்படுத்தக் கூடாதவையாகும்.
இந்தப் பொருள்களுக்கு மாற்றாக காகிதம், துணிப்பை, சணல் பை, காகிதம் மற்றும் துணிக்கொடி, வாழை இலை, பாக்கு மரத் தட்டு, அலுமினியப் பொருள்கள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகப்பொருள்கள், மூங்கில் மரப்பொருள்கள், காகித உறிஞ்சு குழாய், பீங்கான் பொருள்கள், மண் பொருள்கள் ஆகிய பொருள்கள் பயன்படுத்தக் கூடியதாகும்.
இவற்றைக் கவனத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் மாசு இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு, அதிகாரிகள் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் து.சந்திரன், சார் ஆட்சியர் ரத்னா, நேர்முக உதவியாளர் திவ்யஸ்ரீ, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை பொறியாளர் கிருபானந்தராஜன், பல்வேறு துறை அதிகாரிகள், வருவாய் வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com