நவீன தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்: நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வலியுறுத்தல்

பொறியியல் பட்டதாரி மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களது தனித்திறன்களை வளர்த்துக் கொள்வது

பொறியியல் பட்டதாரி மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களது தனித்திறன்களை வளர்த்துக் கொள்வது என்பது காலத்தின் கட்டாயம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வலியுறுத்தினார்.     
திருவள்ளூர் அருகே அரண்வாயல் பிரதியுஷா பொறியியல் கல்லூரியின் 14-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் ராஜாராவ் தலைமை வகித்தார். முதன்மைச் செயல் அதிகாரி பிரதியுஷா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கலந்து கொண்டு பேசியதாவது: இக்கல்லூரியில் இருந்து பொறியியல் பட்டம் பெற்று மாணவர்கள் வெளியேறிச் செல்கின்றனர். 
போட்டி நிறைந்த உலகத்தில் உங்களுக்கான வாய்ப்பைத் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. இதைத் தவிர்க்க ஒவ்வொரு பொறியியல் பட்டதாரியும் நவீன தொழில்நுட்பத்திற்கு அறிவு மற்றும் தனித் திறன்களையும் வளர்த்துக் கொள்வது என்பது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் வாய்ப்புகளை எளிதில் பெற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து அவர் பொறியியல் பிரிவுகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு பட்டம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்கப்பதக்கம் ஆகியவற்றை வழங்கினார். இதேபோல், இந்த நிகழ்ச்சி மூலம் 667 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதோடு, ரூ .1 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார். 
விழாவில் கல்லூரியின் ஆலோசகரான சாய்ராம் வாசு, வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் தயாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ரமேஷ், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com