இருளர் சமூகத்தினர் மனுக்களை அளித்தால் பிரச்னைகள் தீர்க்கப்படும்: மாவட்ட முதன்மை நீதிபதி

இருளர் சமூகத்தினர் தங்களது பிரச்னைகள் குறித்து மனுக்களை அளித்தால் சட்டப்படி, தீர்த்து வைக்கப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் தெரிவித்தார். 


இருளர் சமூகத்தினர் தங்களது பிரச்னைகள் குறித்து மனுக்களை அளித்தால் சட்டப்படி, தீர்த்து வைக்கப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் தெரிவித்தார். 
திருவள்ளூர் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த திம்மபூபாலபுரம் இருளர் காலனியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய அரசு நலத் திட்டங்கள் மற்றும் மலைவாழ் பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, திருவள்ளூர் சார்- ஆட்சியர் ரத்னா மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், மூத்த குடிமையியல் நீதிபதியுமான ஜி.சரஸ்வதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத் துறை அலுவலர் எம்.கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜே.செல்வநாதன் முகாமைத் தொடங்கி வைத்துப் பேசியது: அனைத்துத் தரப்பு மக்களுடனும் பழங்குடியினர் சரிசமமாக இருக்க வேண்டும் என்பதே சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நோக்கமாகும். பழங்குடியினர் பயன்பெறும் வகையில், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறை சார்பில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற திட்டங்களைப் பெற்று பயன்பெற வேண்டும். 
மேலும், இருளர்கள் பிரச்னை குறித்து மனுக்கள் அளித்தால் சட்டவிதிமுறைப்படி தீர்த்து வைக்கப்படும். அதேபோல், பழங்குடியினர் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதுபோல் செய்வதால் ஒவ்வொரு குடும்பத்துக்கான நலத் திட்ட உதவிகளும் கிடைக்கும். மேலும், இருளர் சமூகத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். 
அதனால், ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு முன்னதாக குடும்ப அட்டைகள், ஆதார் பதிவு போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் மார்ச் 6-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், அனைவரும் பங்கேற்றுப் பயனடைய வேண்டும் என்றார் அவர். 
தொடர்ந்து, இருளர் மக்கள் அங்கன்வாடியை சீரமைத்தல், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டைகள் வழங்கல், குடும்ப அட்டைகள், வீடுகளை சீரமைத்தல், திருமண நிதி உதவி, பள்ளிக் கட்டடம் சீரமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நீதிபதியிடம் 10-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். 
முகாமில், ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனத்தின் நிர்வாகச் செயலர் டைட்டஸ், ஒருங்கிணைப்பாளர் பி.ஸ்டீபன், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் லலிதா, பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், வட்டாரக் கல்வி அலுவலர் வீரராகவன், வட்டார அங்கன்வாடி அலுவலர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன் 
நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com