ரூ.6.50 கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.6.50 கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள் கட்டப்படும் இடத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.6.50 கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள் கட்டப்படும் இடத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை காந்தி நகரில் மகளிர் திட்ட அலுவலகமும், மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகமும் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இதேபோல, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் ஆட்சியர் அலுவலகத்தின் 2-ஆவது மாடியிலும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அலுவலகம் தீயணைப்பு நிலையம் பின்புறமும் இயங்கி வருகின்றன.
இதனிடையே, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தி வரும் 4 உணவகங்கள் உள்ள பகுதியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள் கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள் அமையும் இடத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செவ்வாய்க்கிழமை மாலைக்குள் உணவகங்களை காலி செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால், புதன்கிழமை   (டிசம்பர் 12) காலையில் ஆக்கிரமிப்பு உணவகங்கள் இடித்து அகற்றப்படும் என்று உணவகங்களை நடத்தி வரும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு உதவி ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர், கட்டுமானப் பணியை தொடங்க இருக்கும் முழு இடத்தையும் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தார். இதுகுறித்து உதவி ஆட்சியர் மு.பிரதாப் கூறியதாவது:
இங்கு ரூ.6.50 கோடியில் தரைதளம், முதல் தளத்துடன் கூடிய ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள் கட்டப்படுகின்றன. 
இந்தக் கட்டடத்தையும், ஆட்சியர் அலுவலகத்தையும் இணைக்கும் வகையில், முதல் தளத்தில் இருந்து பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை ஓரிரு நாள்களில் நடத்தப்படும்.
இங்குள்ள 4 மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தி வரும் உணவகங்கள் உரிய அனுமதி பெறாமல், வாய்மொழி உத்தரவின்பேரில் நடத்தப்படுகிறது. எனவே, இவற்றை அகற்ற உத்தரவிட்டுள்ளோம் என்றார். ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சஞ்சீவ் காந்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com