மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றத் தேவையான 3,500 கிலோ முதல் தர நெய்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றத் தேவையான 3,500 கிலோ முதல் தர நெய் வேலூர் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவைக் காணவும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தைக் காணவும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம்.
நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, வரும் திங்கள்கிழமை (நவம்பர் 19) வெள்ளித் தேரோட்டமும், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 20) பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடைபெறுகின்றன.
மகா தீபம்: விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா வரும் 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலுக்குப் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகின்றன. இதே நேரத்தில், கோயில் கொடிமரம் அருகே உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும்.
3,500 கிலோ நெய் வரவழைப்பு: இந்த நிலையில், மகா தீபம் ஏற்றத் தேவையான 3,500 கிலோ முதல் தர நெய் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. வேலூர் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெய் டின்கள் சனிக்கிழமை மாலை கோயிலுக்கு வந்தடைந்தன.
இந்த நெய் டின்கள் கோயில் திட்டி வாசல் அருகே உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நெய் டின்கள் மகா தீபம் ஏற்றப்படும் நாளான வரும் 23-ஆம் தேதி அதிகாலையில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்ற இந்த நெய் பயன்படுத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com