செய்யாறு அருகே விவசாயி அடித்துக் கொலை: 2 இடங்களில் உறவினர்கள் மறியல்

செய்யாறு அருகே திங்கள்கிழமை மாலையில் கடப்பாரையால் தாக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார்.

செய்யாறு அருகே திங்கள்கிழமை மாலையில் கடப்பாரையால் தாக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி, அவரது உறவினர்கள் 2 இடங்களில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்யாறு வட்டம், வடதண்டலம் கிராமம் கன்னிகாபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. 
இவரது இரண்டாவது மகன் விநாயகமூர்த்தி(33). விவசாயியான இவர், திங்கள்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்த டிராக்டரை ஓட்டிக்கொண்டு தனது விவசாய நிலத்தை உழுவதற்காக அருகாவூர் கிராமத்துக்குச் சென்றார். ஆனால், பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.இந்த நிலையில், விநாயகமூர்த்தி அவரது நிலத்துக்கு பக்கத்து நிலத்தில் பம்புசெட் அருகே தலையின் பின் பகுதியில் கடப்பாரையால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் சடலமாகக் கிடந்தார்.
வாக்குவாதம்: இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு காவல் நிலைய ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விநாயகமூர்த்தியின் சடலத்தை உடல்கூறு பரிசோதனைக்காக கொண்டு செல்ல முயன்றனர். 
ஆனால், அவரது சடலத்தை எடுக்க விடாமல் போலீஸாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்த பின்னரே விநாயகமூர்த்தியின் சடலத்தை எடுக்க வேண்டும் என உறவினர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்த பின்னரே விநாயகமூர்த்தியின் சடலத்தை அவரது உறவினர்கள் எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.
இரு இடங்களில் மறியல்: இதனிடையே, இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, செய்யாறு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை அருகே செய்யாறு -  காஞ்சிபுரம் சாலையிலும், செய்யாறு காவல் நிலையம் அருகே செய்யாறு - ஆற்காடு சாலையிலும் விநாயகமூர்த்தியின் உறவினர்கள், கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, செய்யாறு வட்டாட்சியர் க.மகேந்திரமணி, காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்வதாக போலீஸார் மீண்டும் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்தக் கொலை சம்பவம் குறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com