18 நவம்பர் 2018

வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி இந்திய மாணவர், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 12th September 2018 07:02 AM

திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி முதல்வர், உதவிப் பேராசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை, முத்துவிநாயகர் கோயில் தெருவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.முத்துச்செல்வம் தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவி எஸ்.செல்வி முன்னிலை வகித்தார்.
மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா, மாணவர் சங்க மாநில துணைச் செயலர் திலீபன், வழக்குரைஞர் சங்க மாவட்டச் செயலர் எஸ்.அபிராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், வேளாண் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உதவிப் பேராசிரியர் ஆர்.தங்கபாண்டியன், இவருக்கு ஆதரவாக இருந்த உதவிப் பேராசிரியர்கள் ஏ.புனிதா, ஆர்.மைதிலி, கல்லூரியில் நடைபெற்ற அனைத்து குற்றங்களையும் மூடி மறைத்த கல்லூரி முதல்வர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் மீதும் காவல் துறை வழக்குப் பதிந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு தொல்லைகள் கொடுப்பதை நிறுத்த வேண்டும். பாலியல் புகார் தெரிவித்த மாணவி பாதுகாப்புடன் திருவண்ணாமலை கல்லூரியிலேயே கல்வி பயில தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் இரா.அண்ணாமலை, இந்திய மாணவர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் ந.அன்பரசன், மாவட்டப் பொருளாளர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

More from the section

கூட்டுறவு வார விழா: 5,516 பேருக்கு ரூ.16.72 கோடி கடனுதவி: அமைச்சர் வழங்கினார்
கடைகளில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆய்வு
மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய்
அருணாசலேஸ்வரர் கோயிலில் சமயப் பேரவை நிகழ்ச்சிகள் தொடக்கம்
தீபத் திருவிழாவின் நான்காம் நாள்: நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா