எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் அதிமுக அரசு: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பெருமிதம்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு திகழ்கிறது என்று தமிழக இந்து

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு திகழ்கிறது என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா, எம்எல்ஏக்கள் கு.பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), தூசி கே.மோகன் (செய்யாறு), வி.பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), திருவண்ணாமலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியைத் திறந்து வைத்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழகம் முழுதும் நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 4 நடுநிலைப் பள்ளிகள், 4 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டியின் கோரிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் கொண்டு சென்று காட்டுமலையனூர் கிராமத்தில் உள்ள பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு திகழ்கிறது. காட்டுமலையனூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நபார்டு நிதியுதவியுடன் விரைவில் புதிய கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்படும்.
இந்தப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டதால், காட்டுமலையனூர், சிங்கவரம், பழைய காட்டுமலையனூர், வெள்ளக்குளம், கெங்கனந்தல் கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் 
என்றார்.
விழாவில், திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் ச.அருள்செல்வம், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜே.துரைராஜ், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் வெ.ஏகாம்பரம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com