ஏலகிரி, காஞ்சனகிரி மலைகளில் தீ விபத்து

ஏலகிரி மலை, லாலாப்பேட்டை காஞ்சனகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 

ஏலகிரி மலை, லாலாப்பேட்டை காஞ்சனகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 
திருப்பத்தூரை அடுத்த ஏலகிரி மலையில் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன. விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். மேலும், கோடை காலம் நெருங்குவதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏலகிரி மலையில் சமூக விரோதிகள் தீ வைக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது.
இந்நிலையில், ஏலகிரி மலையில் உள்ள 9-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள செடி, கொடிகள் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணியளவில்  தீப் பிடித்து எரிந்தன.
தகவலறிந்த திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் கே.ஆர்.சோழராஜன் தலைமையிலான வனத் துறையினர் அங்கு சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து வனச்சரக அலுவலர் கே.ஆர்.சோழராஜன் கூறியது: 
ஏலகிரி மலையில் ஏற்படும் திடீர் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் கடந்த வாரத்தில் வழங்கப்பட்டன. இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
காஞ்சனகிரி மலையில்...
ராணிப்பேட்டை, பிப். 17: ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டை அருகே உள்ள அம்மூர் காப்புக் காட்டில் பிரசித்தி பெற்ற  திருக்காஞ்சனகிரி மலைக் கோயிலும், அடிவாரத்தில் வல்லாம்பிகை சதாசிவ ஈஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளன.
ஆற்காடு வனச்சரக அலுவலகத்துக்கு உள்பட்ட இந்தக் காப்புக் காட்டில் அரிய வகை  செம்மரங்கள் உள்ளிட்ட மரங்கள் உள்ளன. 
இந்நிலையில், இந்த மலையில் ஞாற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்குள்ள அரிய வகை செம்மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் தீயில் கருகின. தீ விபத்து காரணமாக, காப்புக் காட்டில் உள்ள புள்ளி மான்கள் சிதறி ஓடின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com