பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை  மாவட்டத்தில் எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு பாரத பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம் பயிர்களைப் பாதுகாக்க, பண்ணை வருவாயை நிலைப்படுத்த, அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.
நடப்பு பருவத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நவரை நெல், கரும்பு பயிர்களுக்கு கிராம அளவில் அறிவிக்கை செய்யப்பட்டு, விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு காப்பீடு செய்கின்றனர். ஓர் ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.378, ஓர் ஏக்கர் கரும்புப் பயிருக்கு ரூ.960 என்ற அளவில் விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணம் (பிரீமியம்) செலுத்த வேண்டும். மீதி காப்பீட்டுக் கட்டணத் தொகையை மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்காக மானியமாக செலுத்தும்.
நவரை நெல் பயிருக்கு காப்பீட்டுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதியாகும். கரும்புப் பயிருக்கு காப்பீட்டுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் வரும் அக்டோபர் 30-ஆம் தேதியாகும்.
கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறும் வங்கி, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கட்டாயம் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள், அருகில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், இ-பொதுச் சேவை மையங்களில் கடைசி நாளுக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
விவசாயிகள் இதற்கான முன் மொழிவு படிவத்துடன் சிட்டா, அடங்கல், ஆதார் எண் நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்துகொள்ளலாம். 
விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள பயிர் விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் விடுபடாது பதிவு செய்ய வேண்டும்.
இறுதி நேர நெரிசலைத் தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாது பதிவு செய்யவும் கடைசி நாள் வரை காத்திராமல் உடனே இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com