திருவண்ணாமலை

பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் 3 மாணவர்க ளுக்கு வழியனுப்பு விழா

DIN


பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 3 பேருக்கான வழியனுப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் தனித்து விளங்கும் தமிழகப் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், அந்தந்தத் துறைகளில் நிபுணத்துவத்துடன் விளங்கும் வெளி நாடுகளுக்கு கல்விப் பயணம் அனுப்பி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவ, மாணவிகள் இந்தக் கல்வியாண்டில் வெளி நாடுகளுக்கு கல்விப் பயணம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
முதல்கட்டமாக அறிவியல், தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த 50 பேர் கல்விப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தத் திட்டத்தின்கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையிலான குழு மூலம் மாவட்ட அளவிலான சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேசிய, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றதன் அடிப்படையிலும், அறிவியல் சார்ந்த இதர செயல்பாடுகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் பேரிலும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை, எம்.ஏ.காதர் சேட் நினைவு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கே.ஆஷிக், என்.முகமது அபுபக்கர், குப்பநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஆர்.காவ்யா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20) சென்னையில் இருந்து கல்வி, மனித வள மேம்பாட்டில் முன்னணியில் உள்ள பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்குச் செல்கின்றனர்.
அந்த நாடுகளில் உள்ள அறிவியல் மையங்கள், இந்தியத் தூதரதம், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், அந்த நாடுகளின் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்கின்றனர். மேலும், பின்லாந்து, சுவீடன் நாடுகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளைப் பார்வையிட்டு அங்குள்ள ஆசிரியர், மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.
இவர்களுக்கான வழியனுப்பு விழா திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், தேர்வு செய்யப்பட்ட 3 மாணவ, மாணவிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் வாழ்த்தி வழியனுப்பினார். ஜனவரி 30-ஆம் தேதி கல்விப் பயணத்தை நிறைவு செய்து, சென்னை திரும்பும் மாணவர்கள், பின்லாந்து, சுவீடன் நாடுகளின் கலாசாரம், கல்வி முறை, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த புதிய அறிவியல் சிந்தனை பெறுவர் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT