வேலூர்

சாலை விதிமீறலைத் தடுக்க நவீன கண்காணிப்பு வாகனம்

DIN


சாலை விதிமீறலைத் தடுக்க வேலூரில் கேமரா பொருத்திய வேனில் இருந்தபடி அதிகாரிகள் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். அதன் மூலம் சாலை விதிகளை மீறுவோரைப் பிடித்து அபராதமும் விதித்து வருகின்றனர்.
வேலூர் மாநகரில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் பலரும் சாலை விதிகளைப் பின்பற்றாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, சாலை விதிமீறலைத் தடுக்க போக்குவரத்து போலீஸாரும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை விதியை மீறும் வாகன ஓட்டிகளைப் பிடிக்க கேமரா வசதியுடன் கூடிய வேன் வாங்கப்பட்டுள்ளது. இந்த வேனை சாலையின் ஒருபகுதியில் நிறுத்தியபடி வாகன ஓட்டிகளைக் கண்காணிக்கலாம். அப்போது, சாலை விதிமீறும் வாகன ஓட்டிகளைப் பிடித்து அபராதமும் விதிக்க முடியும்.
இதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நவீன கேமரா வசதியுடன் கூடிய வேனுடன் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வேனில் இருந்தபடி தூரத்தில் வரும் வாகனங்களைக் கண்காணித்து விதிமீறும் வாகன ஓட்டிகள் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆய்வாளர்கள் அந்த வாகனங்களைப் பிடித்து அபராதம் வசூலித்தனர்.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியது: இந்த கேமராவுடன் கூடிய வேனைக் கொண்டு 500 மீட்டர் தொலைவில் வரும் வாகனங்களையும் கண்காணிக்க முடியும். 300 மீட்டர் தூரத்தில் அந்த வாகனம் வரும்போது அந்த வாகனத்தின் எண் தெளிவாக தெரியும். இவை அனைத்தும் கேமரா மூலம் கணினியில் பதிவாகிவிடும்.
செவ்வாய்க்கிழமை காலை நடந்த சோதனையில் செல்லிடப்பேசியில் பேசியபடி வந்த 14 வாகன ஓட்டிகள் பிடிபட்டனர். மேலும், அதிக அளவில் நபர்களை ஏற்றி வந்த ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், சாலை விதிமீறலைத் தவிர்க்க ஆலோசனையும் வழங்கப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT