குப்பைகளைத் தரம்பிரித்து வழங்க பெற்றோருக்கு வீட்டுப் பாடம்: பள்ளி மாணவர்கள் மூலம் பெற நடவடிக்கை

குப்பைகளைத் தரம்பிரித்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பெற்றோருக்கு வீட்டுப் பாடம் அளிக்கும் புதிய திட்டத்தை வேலூர் மாநக


குப்பைகளைத் தரம்பிரித்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பெற்றோருக்கு வீட்டுப் பாடம் அளிக்கும் புதிய திட்டத்தை வேலூர் மாநகராட்சி நடைமுறைப்படுத்த உள்ளது.
இதன்படி, பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாட நோட்டுகளில் பெற்றோர் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கிட உறுதியளிக்கிறேன் என எழுதி கையெழுத்திட்டு, ஆசிரியர்களிடம் அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளில் இருந்தும், நாளொன்றுக்கு சுமார் 230 டன் குப்பைகள் வெளியேற்றப்படுகின்றன. இவற்றில் சுமார் 40 சதவீத குப்பைகள் மக்கும் தன்மை கொண்டதாகவும், 30 சதவீதம் மக்காத தன்மையுடையதாகவும், மீதம் 30 சதவீதம் எதற்கும் பயன்படாத பிளாஸ்டிக் குப்பைகளாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். சேகரிக்கப்படும் இந்த குப்பைகளைத் தரம்பிரித்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இதையடுத்து, வீடுகள், நிறுவனங்களில் இருந்து குப்பைகளைப் பெறும்போதே தரம்பிரித்து அளிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
எனினும், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் குப்பைகளைத் தரம்பிரிக்காமலும், ஆங்காங்கே பொது இடங்களில் வீசி எறிந்துவிட்டுச் செல்வதும் தொடர் கதையாகி வருகிறது. இதைத் தடுத்து, வேலூரை குப்பையில்லா மாநகராட்சியாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, வேலூர் மாநகரிலுள்ள மதவழிபாட்டுத் தலங்களிலும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி, கல்லூரி, நிறுவன ஊழியர்கள் மத்தியிலும் தங்களது வீடுகள், பணிபுரியும் இடங்களில் இருந்து குப்பைகளைத் தரம்பிரித்து அளித்திட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், குப்பைகளைத் தரம்பிரித்து வழங்கிட பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சிக்கு உள்பட்ட அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, குப்பைகளைத் தரம்பிரித்து வழங்கிட பள்ளி மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு வீட்டுப்பாடம் அளிக்கும் நடைமுறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் வழியாக பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாட நோட்டுகளில், பெற்றோர்கள் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து வழங்கிட உறுதியளிக்கிறேன் என எழுதி கையெழுத்து பெற்று வரவும், அவற்றைப் ஆசிரியர்கள் சரிபார்த்து உறுதிசெய்திடவும் அறிவுறுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது: தற்போது மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியிலுள்ள பள்ளிகளில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் மூலம் குப்பைகளைத் தரம்பிரித்து வழங்க பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெற்றோருக்கு வீட்டுப் பாடம் அளிக்கும் நடைமுறையை செயல்படுத்த உள்ளோம். இத்திட்டம் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com