பாலாற்றில் குப்பை கொட்ட எதிர்ப்பு: மாநகராட்சி லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

பாலாற்றில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலாற்றில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் காங்கேயநல்லூர் பாலாற்றை ஒட்டிய பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த சில வாரங்களாக காட்பாடி, கழிஞ்சூர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை மாநகராட்சி வாகனத்தில் கொண்டு வந்து பாலாற்றில் கொட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடிநீரும் மாசடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், செவ்வாய்க்கிழமை காலையும் மாநகராட்சி லாரியில் குப்பபைகளைக் கொண்டு வந்து காங்கேயநல்லூர் பாலாற்றில் கொட்டியுள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: 
மாநகராட்சி லாரிகளில் குப்பைகளைக் கொண்டு வந்து பாலாற்றில் கொட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
கடந்த 6 மாதங்களுக்கு முன் இதேபோல் குப்பை வண்டிகளை கொட்டியபோது சிறைபிடித்தோம். அப்போது, பாலாற்றில் குப்பைகளைக் கொட்ட மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். 
ஆனால், கடந்த 15 நாள்களாக மீண்டும் குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனர். மேலும், குப்பைகளுக்கு தீ வைத்துவிட்டுச் சென்றுவிடுவதால் புகை மூட்டம் ஏற்படுவதோடு, துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, குப்பைகளைக் கொட்ட நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மாநகராட்சி மண்டல அதிகாரிகள், பாலாற்றில் குப்பை கொட்டுவதில்லை என மீண்டும் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com