பொய்கை சுற்றுச்சாலைக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு: ஆட்சியர் ராமன் தகவல்

பொய்கை பகுதியில் சுற்றுச்சாலை அமைக்க கையகப்படுத்தும் நிலம், குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று

பொய்கை பகுதியில் சுற்றுச்சாலை அமைக்க கையகப்படுத்தும் நிலம், குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார். முன்னதாக, சுற்றுச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தக்கூடிய பகுதியை ஆட்சியர், சார்-ஆட்சியர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பொய்கை அருகே பிள்ளையார்குப்பம், புத்தூர் பகுதிகளில் சுற்றுச்சாலை அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அளவீடு செய்து கற்கள் நடப்பட்டுள்ளன. இதனால், நிலங்களை இழக்கும் அப்பகுதி மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மேலும், சுற்றுச்சாலைக்கு இழக்கக்கூடிய பெரும்பகுதி நிலப்பரப்பு விவசாய நிலப்பகுதியாக இருப்பதால் இது பொதுமக்களின் வாழ்வதாரத்தை பெருமளவில் பாதிக்கும் எனத் தெரிவித்தனர். மேலும், செதுவாலையில் இருந்து விரிஞ்சிபுரம் வழியாக காட்பாடி சாலைக்கும், பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரியில் இருந்து தங்கக்கோயில் வழியாக ஆரணி, திருவண்ணா மலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து தங்கக்கோயில் வழியாக புத்தூர், பூதூர், நரசிங்கபுரம், நாடாமங்கலம் வழியாக நாற்கர சாலையை அடையலாம். இந்தச் சாலையை அகலப்படுத்தினாலே போக்குவரத்து சீராகும். எனவே, புதிதாக சுற்றுச்சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு இந்தச் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், சார்-ஆட்சியர் கே.மெஹராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பொய்கை சுற்றுச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பகுதிகளை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் அணைக்கட்டிலிருந்து ஆசனாம்பட்டு வரைச் செல்லும் சாலையானது விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலஎடுப்பு செய்யப்பட்டுள்ளதால் அந்தச் சாலையைப் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொய்கை பகுதியில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சாலைக்காக கையகப்படுத்தும் நிலத்துக்கும், அந்நிலங்களில் உள்ள குடியிருப்புகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் நிலங்கள், வீடுகள், மரங்கள் வழங்கும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளின்றி உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com