வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

தண்டவாளப் பராமரிப்பாளரை  தாக்கியதாக டிடிஆர் மீது வழக்கு

DIN | Published: 12th September 2018 01:11 AM

ரயில் தண்டவாளப் பராமரிப்பாளரை தாக்கியதாக டிடிஆர் மீது ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா (45). ரயில்வே ஊழியரான இவர், ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கம்பட்டி-பச்சூர் ரயில் நிலையத்துக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், திங்கள்கிழமை குப்பத்திலிருந்து ஜோலார்பேட்டைக்கு வருவதற்காக, பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் லால்பாக் விரைவு ரயிலில் சக ஊழியர்களுடன், முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார். 
அப்போது, அதே ரயிலில் டிடிஆராக பணியாற்றி வரும் மாணிக்கவாசகம்  (42) மல்லிகார்ஜுனா உள்பட ரயில்வே ஊழியர்களை முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏன் பயணம் செய்கிறீர்கள்? எனக் கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு, தாங்களும் ரயில்வே ஊழியர்கள் தான்; தங்களுக்கு பயணம் செய்ய உரிமை உள்ளது எனக் கூறியுள்ளனர். 
இதனால், இருதரப்பிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, மாணிக்கவாசகம் மல்லிகார்ஜுனாவை தாக்கினாராம். இதில் காயமடைந்த மல்லிகார்ஜுனா ஜோலார்பேட்டை ரயில்வே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து, மல்லிகார்ஜுனா அளித்த புகாரின்பேரில், ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 
அதேசமயம், தன்னை மல்லிகார்ஜுனா பணி செய்ய
விடாமல் தடுத்துத் தாக்கியதாக மாணிக்கவாசகம் காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

More from the section

பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்
வழிபாட்டுத் தலத்துக்கு சுற்றுச்சுவர்  அமைக்க மக்கள் எதிர்ப்பு: மறியல் முயற்சி - போலீஸார் குவிப்பு
ஏரிக்கரை தடுப்புச் சுவரை தரமாக கட்டக் கோரி கிராம மக்கள் போராட்டம்
பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம்


காலணி தொழிற்சாலை தொழிலாளர்களின் பிரச்னையில் அரசு தலையிட வேண்டும்: ஜி.கே.மணி