வேலூர்

அண்ணாவின் கொள்கைகளை மறந்தவர்கள் திமுகவினர்: இ.மதுசூதனன் குற்றச்சாட்டு

DIN

வாரிசு அரசியல் கூடாது என்ற அண்ணாவின் கொள்கையை அடியோடு  மறந்தவர்கள் திமுகவினர் என அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் குற்றம் சாட்டினார்.
குடியாத்தம் நகர அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது கட்சியில் சேர்ந்தவர் அண்ணா. 
பின்னர், தமிழக மக்களின் நலனுக்காக திமுகவைத் தொடங்கினார். திமுகவின் பொதுச் செயலராக பதவியை ஏற்ற அண்ணா, பெரியாருக்காக  திமுகவின் தலைவர் பதவியை யாருக்கும் தராமல் காலியாக வைத்திருந்தார். 
செல்வந்தர்களுக்கு மட்டுமே பதவி என்ற காங்கிரஸின் கொள்கைகளை அடியோடு  தகர்த்தெறிந்து சாமானியரும் அரசியலில் பதவிக்கு வர முடியும் என எண்ணிய அண்ணா, 1967- இல் எம்ஜிஆரின் இடைவிடாத பிரசாரத்தின் பலனாக ஆட்சியைப் பிடித்தார். 
அண்ணா மறைவுக்குப் பின், அவரது கொள்கைகளை மறந்த கருணாநிதி திமுகவின் தலைவரானார். வாரிசு அரசியல் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்த அண்ணா முதல்வராக இருந்தபோது, தலைமைச் செயலகத்துக்கு வந்த தனது வளர்ப்பு மகன் சி.என்.ஏ.பரிமளத்தை கடிந்து கொண்டார். 
தனது உறவினர்கள் யாரும், கட்சியிலோ, பதவியிலோ வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். 
ஆனால் கருணாநிதியில் தொடங்கி இன்று வரை திமுகவில் வாரிசு அரசியல் தொடர்கிறது. கருணாநிதிக்குப் பின் அவரது மகன் ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். 
அண்ணாவின் கொள்கைகளை மறந்த திமுகவினர், அவரை சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது. 
அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்றார் அவர்.
மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பேசியதாவது:
 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க் கட்சித் தலைவர் என்பதை மறந்து தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி வருகிறார். ஊழலைப் பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்தியாவில் ஊழலுக்காகவே ஒரு ஆட்சி கலைக்கப்பட்டதென்றால் அது திமுகதான் என்பதை ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும். 
எப்படியாவது அரசை கைப்பற்றி விட வேண்டும் என அவர் பகல் கனவு காண்கிறார். அதிமுக இரும்புப் கோட்டையாக திகழ்கிறது. ஸ்டாலினின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது என்றார் அவர். 
கூட்டத்துக்கு, நகர அதிமுக செயலர் ஜே.கே.என். பழனி தலைமை வகித்தார். கே.வி. குப்பம் எம்எல்ஏ ஜி.லோகநாதன், கட்சிப் பேச்சாளர் டி.கே.கலா, அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் வி.ராமு, அவைத் தலைவர் வி.என்.தனஞ்செயன், துணைச் செயலர் 
ஆர். மூர்த்தி, நகர்மன்ற முன்னாள் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், வழக்குரைஞர் கே.எம்.பூபதி, ஒன்றியச் செயலர் கே.எம்.ஐ. சீனிவாசன், பேர்ணாம்பட்டு நகரச் செயலர் எல்.சீனிவாசன்,  மாவட்ட  எம்ஜிஆர் அணி இணைச் செயலர் ஜி.ஏ. டில்லிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT