காலணி தொழிற்சாலை தொழிலாளர்களின் பிரச்னையில் அரசு தலையிட வேண்டும்: ஜி.கே.மணி

ஆம்பூர் அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காலணி தொழிற்சாலை தொழிலாளர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண

ஆம்பூர் அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காலணி தொழிற்சாலை தொழிலாளர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண அரசு தலையிட வேண்டும் என பாமக தலைவர் 
ஜி.கே.மணி புதன்கிழமை தெரிவித்தார்.
ஆம்பூர் அருகே சோலூர் கிராமத்தில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் 750-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்தத் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் சம்பளம், போனஸ் கேட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த 
நிலையில் கடந்த டிசம்பர் மாதம் எந்தவித முன்னறிவிப்பு இன்றி இரவோடு இரவாக தொழிற்சாலை இருந்த பொருள்கள் வெளியேற்றப்பட்டு தொழிற்சாலை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் தினமும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி புதன்கிழமை போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களைச் சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தொழிலாளர்களிடம் தெரிவித்தார். அப்போது பெண்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்ப்பட்டுள்ளதாகக் கூறினர்.  அவர்களுக்கு ஜி.கே. மணி ஆறுதல் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காலணி தொழிற்சாலை தொழிலாளர்கள் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப் பணத்தை நிர்வாகம் கட்டவில்லை. இதனால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் பாமக முன்னின்று தொழிலாளர்களுக்காக போராட்டம் நடத்தும் என்றார் அவர். முன்னாள் எம்எல்ஏ டி.கே.ராஜா, மாநிலத் துணைத் தலைவர் பொன்னுச்சாமி, மாவட்டச் செயலாளர் கிருபாகரன், வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.கே.முரளி ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com