கண்டலேறு அணை திறப்பு: சென்னைக்கு ஒரு வாரத்தில் குடிநீர் வரும் வாய்ப்பு 

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் சனிக்கிழமை  திறக்கப்பட்டுள்ளது.


ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் சனிக்கிழமை  திறக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு  ஒரு வாரத்துக்குள் வந்து சேர வாய்ப்பு உள்ளது.  தண்ணீர் திறப்பு படிப்படியாக 1,500 கன அடியாக அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் கடந்த 1983-இல் கிருஷ்ணா நதி நீர்ப் பங்கீடு திட்டத்தை வகுத்தது.  அதன்படி,  நெல்லூர் அருகில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.  அதாவது, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி,  ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என தண்ணீர் வழங்க வேண்டும்.
177 கிலோமீட்டருக்கு கால்வாய் அமைப்பு: இதற்காக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தொலைவு வரை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திர மாநிலத்தில் 152 கிலோ மீட்டரும், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்ட்டிலிருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோமீட்டர் தொலைவும் உள்ளது.
ஒப்பந்தப்படி... கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை கொடுக்க வேண்டிய 8 டி.எம்.சி. தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை. ஆந்திர மாநிலத்தில் பற்றாக்குறை நிலவுவதால் தண்ணீர் திறக்க முடியவில்லை என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அக்டோபர் மாதம் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே 15 நாள்களுக்கு முன்பு கிருஷ்ணா கால்வாயில் சென்னைக்கு தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
சென்னைக்கு தண்ணீர் திறப்பு:  இந்த நிலையில் ஆந்திரத்தில் கன மழை பெய்ததால் அங்குள்ள ஸ்ரீசைலம் அணை நிரம்பியது.  அந்த அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருந்ததால் அந்தத் தண்ணீர் கண்டலேறு அணைக்கு வந்து சேர்ந்தது. அந்த அணையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 9.16 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
தண்ணீர் திறப்பு: இதையடுத்து கண்டலேறு அணையிருந்து  கிருஷ்ணா நதி நீர் கால்வாயில்  சனிக்கிழமை தண்ணீர்  திறக்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வெங்கடகிரி சட்டப்பேரவை உறுப்பினர் குருகோண்ட்லா,  சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் பிரபு சங்கர்,  தலைமைப் பொறியாளர் ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி,  செயற்பொறியாளர்கள் வைதேகி,  பாரதி,  ஜெயப்பிரகாஷ்,  ஆந்திர மாநில குடிநீர் வழங்கல் பிரிவு செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  கண்டலேறு அணையில் சனிக்கிழமை திறக்கப்பட்ட தண்ணீர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா கால்வாய் மூலம்  காளஹஸ்தி வந்ததும் அங்கிருந்து திருப்பதிக்கு குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது.  அதன் பிறகு நீர்வரத்தின் அளவைப் பொருத்து சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊத்துக்கோட்டைக்கு எப்போது வரும்?: கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் ஏழு நாள்களுக்குள் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வரும். அடுத்து வரும் நாள்களில் திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு 1,500 கன அடியாக அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
சென்னை குடிநீர் ஏரிகளில்...  தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருப்பு குறைந்து விட்டது.  புழல்,  பூண்டி,  சோழவரம்,  செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடி (11.2 டிஎம்சி) ஆகும்.  ஆனால் இவற்றில் சனிக்கிழமை நிலவரப்படி 10 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீர் (950 மில்லியன் கன அடி) மட்டுமே இருப்பு உள்ளது.  தற்போது வீராணத்தில் இருந்து கொண்டுவரப்படும் நீர் சென்னையில் விநியோகிக்கப்படுகிறது.
அதிகாரிகள் நம்பிக்கை: கண்டலேறு அணையிலிருந்து சென்னைக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் மூலம் சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையை முடிந்த அளவுக்கு பூர்த்தி செய்ய முடியும். அந்த நதி நீர் தடையின்றி வர கிருஷ்ணா நதி நீர் வாய்க்காலில் முதல் 10 கி.மீ. பழுது பார்க்கப்பட்டு தயாராக உள்ளது. அடுத்த 20 கி.மீ பகுதியில் செடி, கொடி, முட் புதர் ஆகியவற்றை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com