வாக்காளர் பட்டியலில் பெயரை உறுதி செய்து கொள்ள வேண்டும்: ஆட்சியர்எஸ்.ஏ.ராமன்

ஜனநாயகக் கடமையான தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் ஒவ்வொருவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்


ஜனநாயகக் கடமையான தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் ஒவ்வொருவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக சிறப்பு கிராம சபைக் கூட்டம் வேலூர் மாவட்டத்திலுள்ள 743 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை நடைபெற்றது. கணியம்பாடி ஒன்றியம், காட்டுப்புத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலுள்ள அனைத்து மக்களின் முக்கிய கடமை தேர்தலில் வாக்களிப்பதாகும். இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரது பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து வருகிறது. பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சிறப்பு சுருக்க திருத்த முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படுகிறது. இதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 23) நடைபெறும் இரண்டாம் கட்ட சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பொதுமக்கள் தங்களது பெயர், முகவரி, வாக்குச்சாவடி மையம் ஆகியவை வாக்காளர் பட்டியலில் இருப்பது உறுதிசெய்து கொள்ள வேண்டும். மேலும், 18 வயது பூர்த்தி யடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கவும் வேண்டும்.
அக்டோபர், 2-ஆம் தேதி காந்தி ஜயந்தியையொட்டி தூய்மை வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் கிராமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், அரசு இலவசமாக கட்டிக்கொடுத்த கழிப்பறைகளை கிராம மக்கள் உபயோகிக்கவும் வேண்டும். மேலும், ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தமிழக அரசு விதித்துள்ளதை பின்பற்றி கிராம மக்கள் பிளாஸ்டிக்குக்கு பதிலாக மாற்று பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டு குறைபாடில்லா ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, தூய்மைப் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர், அங்கன்வாடி மையத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாற தயாராக இருந்து உணவை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இதில், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண், வட்டாட்சியர்கள் ரமேஷ் (வேலூர்), ஹெலன்ராணி (அணைக்கட்டு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூர் வட்டத்துக்கு உள்பட்ட உடையாமுத்தூர் கிராமத்தில் தேர்தல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வாக்காளர் பதிவு அலுவலரும், சார்-ஆட்சியருமான பி.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
வாக்காளர் பதிவு துணை அலுவலரும், வட்டாட்சியருமான
டி.எஸ்.சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில், வாக்காளர்கள் பெயர் திருத்தம், சேர்க்கை மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றை சிறப்பு முகாம்களில் திருத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாட்டம், நையாண்டி, ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com