வேலூர்

பாலாறு பாழாக இரு திராவிடக் கட்சிகளே காரணம்: அன்புமணி ராமதாஸ்

DIN

பாலாறு வறண்டு பாழாகி கிடப்பதற்கு தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரிந்த திமுக, அதிமுக கட்சிகளே காரணம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக சார்பில் "பாலாற்றைக் காப்போம், கரம் கோர்ப்போம்' என்ற விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
வேலூர் மாவட்டத்தில் பால் போல் ஓடிய பாலாறு தற்போது வறண்டு பாழாகிக் கிடப்பதற்கு தமிழகத்தை மாறிமாறி ஆட்சிபுரிந்த திமுக, அதிமுக கட்சிகளே காரணமாகும். கடந்த 22 ஆண்டுகளாக பாலாற்றைப் பாதுக்காக்க பாமக போராடி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகத்திலிருந்த 47 ஆயிரம் ஏரிகளில் தற்போது 42 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. 5 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய்விட்டன. தமிழகத்தில் உள்ள தாமிரவருணி, காவிரி, வைகை உள்ளிட்ட அனைத்து ஆறுகளையும் பாதுகாக்க பாமக பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 
பாமக சினிமாவுக்கு எதிரான கட்சி அல்ல. சினிமா கலாசாரத்துக்குத்தான் எதிரானது. தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாக விளங்கும் வேலூரை 3 மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் கோடையில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகும். வருங்காலங்களில் இந்த வெப்ப அளவு மேலும் அதிகரிக்கக்கூடும். இதைத் தடுக்க வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைகளிலும் மரங்களை நட்டு பசுமையாக்க திட்டமிட்டுள்ளோம். வரும் 5 ஆண்டுகளில் இம்மாவட்ட மலைகளில் 10 லட்சம் புங்கை, வேம்பு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். இந்தப் பணியில் தனியார் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், ரோட்டரி சங்கங்கள், பொதுமக்களும் கரம் கோர்க்க வேண்டும்.
பாலாற்றைப் பாதுகாக்க ஆந்திரத்தில் கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற வேண்டும். பாலாற்றில் நாளொன்றுக்கு 70 லட்சம் லிட்டர் கழிவுகள் நேரடியாக கலக்கிறது. இதைத் தடுக்க தோல் பதனிடும் தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். பாலாற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. அதை  முழுமையாக தடுத்திட வேண்டும். மேலும், நீண்டகால கோரிக்கையான தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்டை மாநிலங்கள் நீர்நிலைக்கு அதிக நிதி ஒதுக்கும் நிலையில், தமிழக அரசு இலவசத் திட்டங்களுக்கு ரூ. 62 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. அதை வைத்து பல அணைகள் கட்டியிருக்க முடியும். பாமக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முதன்மை மாநிலமாக்கப்படும். அதற்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் கே.எல்.இளவழகன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலர் டி.கே.ராஜா வரவேற்றார். மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர்.வேலு, என்.டி.சண்முகம், மாநில துணைத் தலைவர் நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT