பேருந்தில் இறந்த மூதாட்டியின் சடலத்தை சாலையோரம் இறக்கி வைத்துச் சென்ற அவலம்

காட்பாடி அருகே தனியார் பேருந்தில் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சாலையோரத்தில் இறக்கி வைத்துச் சென்ற சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காட்பாடி அருகே தனியார் பேருந்தில் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சாலையோரத்தில் இறக்கி வைத்துச் சென்ற சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காட்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் பூஷணம் (60). அவர் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை ரயிலில் காட்பாடிக்கு வந்தார். பின்னர், காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு தனியார் பேருந்தில் ஏறி வந்தார். 
பேருந்து நிலையம் அருகே வந்தபோது முன்வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த பூஷணம், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். ஆனால், அவர் மயக்கமடைந்ததாக எண்ணிய பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் பூஷணத்தின் உடலை சித்தூர் பேருந்து நிலையத்தில் இறக்கி வைத்துவிட்டுச் 
சென்றனர்.
நீண்டநேரமாக அசைவற்று இருந்த பூஷணத்தின் உடலைப் பார்த்த அப்பகுதி கடைக்காரர்கள், காட்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து சென்று பார்வை யிட்டதுடன், பூஷணத்தின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, செய்யாறில் உள்ள பூஷணத்தின் மகன்களுக்கு தகவல் அளித்து வரவழைக்கப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டது. 
இதனிடையே, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநரையும், நடத்துநரையும் பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில், பூஷணம் பேருந்திலேயே இறந்துவிட்டது தெரிய வந்தது. எனினும், பூஷணத்துக்கு ஏற்கெனவே ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது என்றும், அதனால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் பூஷணத்தின் மகன்கள் கேட்டுக் கொண்டதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அதேசமயம், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com