உயர்த்தப்பட்ட சொத்து வரியை 100 சதவீதம் வசூலிக்க குழுக்கள் அமைப்பு

வேலூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை 100 சதவீதம் வசூலிக்கும் பணி தீவிப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை 100 சதவீதம் வசூலிக்கும் பணி தீவிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 4 மண்டலங்களிலும்  18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளில் குடியிருப்பு அல்லாத வர்த்தகக் கட்டடங்கள் 15 ஆயிரம் மற்றும் சொத்துவரி இனங்களாக மொத்தம் 1.28 லட்சம் உள்ளது. இந்நிலையில், மாநகராட்சியில் குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவீதமும், வர்த்தகக் கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரி கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. எனினும், இந்த உயர்த்தப்பட்ட சொத்துவரி அடிப்படையில் நிகழாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட சொத்துவரி விகிதங்களின் அடிப்படையில் வரிவசூலிக்கும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் 4 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் சொத்து வரி சீராய்வு அறிவிப்பு நோட்டீஸை அனைத்து குடியிருப்புகள், வர்த்தகக் கட்டட உரிமையாளர்களுக்கும் அளித்து வருகின்றனர். இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 15 நாள்களுக்குள் சொத்துவரியை மாநகராட்சி வரிவசூல் மையங்களில் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 
அதன் அடிப்படையில், மாநகராட்சி வரிவசூல் மையங்களில் நாளொன்றுக்கு ரூ. 75 லட்சம் என்ற இலக்கு அடிப்படையில் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
வேலூர் மாநகராட்சியில் வழக்கமாக ஆண்டுக்கு ரூ. 28 கோடி சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. இது, குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும், வர்த்தகக் கட்டடங்களுக்கு 100 சதவீதமும் உயர்த்தப்பட்டதன் அடிப்படையில் இந்த ஆண்டு ரூ. 42 கோடி வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை ரூ. 4.75 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து, உயர்த்தப்பட்ட சொத்துவரியை 100 சதவீதம் முழுமையாக வசூலிக்க 1,3, 4-ஆவது மண்டலங்களுக்கு தலா 4 குழுக்களும், 2-ஆவது மண்டலத்துக்கு 6 குழுக்கள் என மொத்தம் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டட உரிமையாளர்கள் சொத்துவரி சீராய்வு அறிவிப்பு நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 15 நாள்களுக்குள் சொத்துவரி செலுத்த அறிவுறுத்தப்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com