வேலூர்

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் மீட்பு

DIN

கணியம்பாடியில் செங்கல் சூளையில் 13 ஆண்டுகளாக கொத்தடிமைத் தொழிலாளர்களாக வேலை செய்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேரை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை மீட்டனர். 
அவர்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைப்பதற்கான சான்றுகளை அளித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 
வேலூரை அடுத்த கணியம்பாடியைச் சேர்ந்தவர் சரவணன்(33). அந்த கிராமத்தில் அவருக்குச் சொந்தமாக உள்ள செங்கல் சூளையில் 13 ஆண்டுகளாக வேலை செய்து வந்த வேலூரை அடுத்த ஊசூர் இருளர் காலனியைச் சேர்ந்த வி.ராஜேஷ், அவரது மனைவி, ஒரு குழந்தை, இரு தம்பிகள் ஆகியோர் அங்கிருந்து தப்பித்து ஊர்ஊராகச் சுற்றி வந்தனர். இதையறிந்த தென்றல் தொண்டு நிறுவனத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகாரின்பேரில், அந்த குடும்பத்தினரை சார்-ஆட்சியர் கே.மெஹராஜ் அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது, ராஜேஷின் தந்தை வாங்கிய ரூ.70 ஆயிரம் கடனுக்காக நபருக்கு நாளொன்றுக்கு ரூ.100 என்ற அடிப்படையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்ததாகவும், ஆனால் கூறியபடி கூலி கொடுக்காமல் வாரத்துக்கு ரூ.200 என்ற அடிப்படையிலேயே கூலி வழங்கி வந்ததும், ஒரு நாளைக்கு 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், செங்கல் சூளையில் பணியாற்றியபோது சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை இறந்து விட்டதாகவும், அவரது இறப்புக்குப் பிறகும் உரிய தொகை வழங்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, ராஜேஷ் உள்பட 5 பேரும் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உடனடியாக விடுதலைச் சான்று அளிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு அரசு நிவாரண உதவிகள் கிடைக்கச் செய்வதுடன், அவர்களை சொந்த ஊரில் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
அதேசமயம், தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணியமர்த்தியிருந்த சரவணன் மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT