மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்: ஐஐடி பேராசிரியர் மங்கள சுந்தர்கிருஷ்ணன்

மாணவர்கள் தங்களிடம் உள்ள அறிவியல் திறனை புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்த வேண்டு


மாணவர்கள் தங்களிடம் உள்ள அறிவியல் திறனை புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஐஐடி சென்னை வேதியியல் துறை பேராசிரியர் மங்கள சுந்தர்கிருஷ்ணன் தெரிவித்தார்.
இனோ விஐடி என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அறிவியல் போட்டி, அறிவியல் கண்டுபிடிப்புகளின் கண்காட்சி விஐடி பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 8ஆவது தேசிய அறிவியல் கண்காட்சி, போட்டிகள் விஐடியில் சனிக்கிழமை தொடங்கின. இரு தினங்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலுள்ள 34 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 564 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அறிவியல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 
இதில், வேலை மாதிரி வடிவம் போட்டியில் 70 குழுக்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆலோசனை வழங்கும் போட்டியில் 42 குழுக்களும், அறிவியல் சார்ந்த விளம்பரப் பதாகைகள் வழங்கும் போட்டியில் 59 குழுக்களும், அறிவியல் வினாடி-வினா போட்டியில் 62 குழுக்களும் பங்கேற்றுள்ளன.
இனோ விஐடி தொடக்க நிகழ்ச்சிக்கு விஐடி துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல் தலைமை வகித்தார். விஐடி முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி முதல்வர் ஏ.மேரிசாரல் வரவேற்றார். 
இனோ விஐடி நோக்கம் குறித்து அதன் அமைப்பு செயலர் அருணை நம்பிராஜ் விளக்கமளித்தார். இதில், ஐஐடி சென்னை வேதியியல் துறை பேராசிரியர் மங்கள சுந்தர்கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியது: பள்ளி மாணவர்களிடையே உள்ள அறிவியல் திறனை வெளிக்கொண்டு வருவதற்கான நிகழ்வாக இந்த இனோ விஐடி நிகழ்வு அமைந்துள்ளது. பள்ளி வாழ்க்கையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. 
அவற்றை மாணவர்கள் கண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எதிலும் அடிப்படையை அறிந்து கொள்ள வேண்டும். 
மூன்று, நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலிலியோ, ஐசக், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளே தற்போது அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாக உள்ளன. 
அதேபோல், ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில், கல்லணை போன்றவை இன்றும் நிலைத்து நிற்பதற்கு அந்தக் காலத்தில் இருந்த அறிவியல் விஞ்ஞானிகளே காரணமாவர்.
இந்தியா அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் துறையில் மிகப்பெரிய வளர்ச்சிக் கண்டுள்ளது. பறவைகளின் இயக்கத்தை அடிப்படையாக வைத்து விமானங்களும், மைக்ரோ வேவ் வசதி மூலமாக தகவல் பரிமாற்றம் போன்றவையும் உருவாயின. மாணவர்கள் தங்களிடம் உள்ள அறிவியல் திறனை புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்த வேண்டும். அதிலும் உற்பத்தித் திறனை அதிகரிக்க கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும். அதற்கேற்ற வகையில் ஆசிரியர்கள் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், விஐடி இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், பேராசிரியர் ஆர்.விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் ஜேம்ஸ் ஜெபசீலன் சாமுவேல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com