சூடுபிடித்த தேர்தல் பிரசாரத்துக்கு இடையே சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதி

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால்


மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 இதையடுத்து, பகல் நேர தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் குறைந்து வருவதால் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் சலிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே கோடைகாலத்தில் வெயில் அதிகம் நிலவும் மாவட்டமாக வேலூர் உள்ளது. இம்மாவட்டத்தில் நிகழாண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. மார்ச் தொடக்கத்தில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவில் இருந்த வெயில் அளவு, சில நாள்களிலேயே 100 டிகிரியைக் கடந்தது. 
தொடர்ந்து, கடந்த 6-ஆம் தேதி அதிகபட்சமாக 105.10 டிகிரி வெப்பம் பதிவானது.
அதன்பிறகு, வெயில் அளவு 100 டிகிரிக்கு கீழாக குறைந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் நூறு டிகிரியைக் கடந்து 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வெயில் அளவு சனிக்கிழமை 102.40 டிகிரியாக மேலும் அதிகரித்தது. வெப்ப அளவு இனி தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடுவதற்கு அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே, மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வேலூர் மாவட்டத்தில் தற்போதுதான் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அதிகரித்து வரும் வெயிலால் பகல் நேரங்களில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகின்றன. இது வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அதிகரிக்கும் கோடை வெயிலை அடுத்து பகல் நேரக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் நலனுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தலைவர்கள் சில நிமிடங்களில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பி விடுவதால் அரசியல் கட்சியினர் பெரும்பாலும் அவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com