மருதமலையில் சூரசம்ஹாரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் "அரோகரா' கோஷத்துடன்

கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் "அரோகரா' கோஷத்துடன் சூரசம்ஹாரப் பெருவிழா விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டம், மருதமலையில் உள்ள சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளில் சூரசம்ஹார நிகழ்வு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.  நிகழாண்டுக்கான கந்த சஷ்டி விழா நவம்பர் 8 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை 9 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. 
திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை ஒட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு மூலவர் சண்முகார்ச்சனையும்,  தங்கக் கவசத்தில் சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரமும், யாக சாலை பூஜையும், பிற்பகல் 12 மணிக்கு உச்சி காலை பூஜையும் நடைபெற்றன.
பிற்பகல் 2.45  மணிக்கு அன்னையிடம் இருந்து முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து, தாரகாசூரன், பானுகோபன் வதம், சிங்கமுகசூரன் வதம், இறுதியாக சூரபத்மன் வதம் மற்றும் வெற்றிவாகை சூடும் நிகழ்வும் நடைபெற்றன. மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகம், பூஜை,  தீபாரதனை நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில், கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் அடிவாரத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.  மேலும், வடவள்ளி காவல் துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 
கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான புதன்கிழமை காலை 9 முதல் 10.30 மணிக்குள் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. பிற்பகல் 12 மணி அளவில் விழா நிறைவடைய உள்ளது. 
கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ரத்தின விநாயகர் கோயில், சுக்கிரவார் பேட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில், பீளமேடு பி.கே.டி.நகரில் உள்ள ஓம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com