என்ஜின் பழுதால் கல்லாறு ரயில் நிலையத்தில் நின்றது மலை ரயில்

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்குப் புறப்பட்ட மலை ரயில் பழுதாகி கல்லாறு ரயில் நிலையத்தில்

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்குப் புறப்பட்ட மலை ரயில் பழுதாகி கல்லாறு ரயில் நிலையத்தில் நின்றதால் புதன்கிழமை மூன்றரை மணி நேரம் தாமதமாகச் சென்றது.  
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்து வருகின்றனர். 
பழைமை வாய்ந்த மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரியச் சின்னமாக 2005ஆம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் வழக்கம்போல் புதன்கிழமை காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் புறப்பட்டது. இதில் 187 சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர். 
மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரயில் காலை 7.30 மணிக்கு கல்லாறு ரயில் நிலையத்தை அடைந்தது. அங்கு ரயில் என்ஜினுக்கு தண்ணீர் பிடித்த பின் குன்னூருக்குப் புறப்பட்டுச் செல்ல ரயில் தயாரானது. 
அப்போது திடீரென ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. உடனே கல்லாறு ரயில் நிலையத்தில் பாதி வழியிலேயே ரயில் நிறுத்தப்பட்டது.  
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு மாற்று ரயில் என்ஜின் கல்லாறு ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 
அதன் பின் மாற்று ரயில் என்ஜின் ரயில் பெட்டிகளோடு இணைக்கப்பட்டு அங்கிருந்து சுமார் மூன்றரை மணி நேரம் தாமதமாக குன்னூருக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com