"கோவையில் வீடுகளுக்கு குழாய் மூலம் விரைவில் இயற்கை எரிவாயு விநியோகம்'

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்தின் கீழ் 9 லட்சம் இணைப்புகளுக்கு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்தின் கீழ் 9 லட்சம் இணைப்புகளுக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி தலைமைப் பொதுமேலாளர் வி.கோபாலகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் 200 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 14 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகனங்களுக்கான  எரிபொருளாக 8 மில்லியன் டன்னும், வீடுகளுக்கான சமையல் எரிவாயுவாக 2 மில்லியன் டன்னும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
விலை உயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இயற்கை எரிவாயுப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியுள்ளது. நகரங்களில் மாசு அளவைக் குறைக்க, குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு இணைப்புகளை 28 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் டன் பெட்ரோலியப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் ஏறத்தாழ 2.4 கோடி வாகனங்களும், கோவையில் சுமார் 24 லட்சம் வாகனங்களும் பெட்ரோல், டீசலை நம்பி இயக்கப்படுகின்றன. இதேபோல, கோவை மாவட்டத்தில் 11 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன.
இயற்கை எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்த நகர எரிவாயு விநியோகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவை, சேலம் மாவட்டத்தில் இதற்கான பணிகளை மேற்கொள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ.1500 கோடி செலவிடப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அடுத்த 8 ஆண்டுகளில் 9 லட்சம் வீடுகளுக்கும், 273 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படும். இந்த எரிபொருள்களுக்கான விலை, தற்போதுள்ள எரிபொருளின் விலையை விட சுமார் 40 சதவீதம் குறைவாக இருக்கும். இத் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் வகையில் தில்லியில் வியாழக்கிழமை (நவம்பர் 22) பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். அப்போது, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் விழாவில், இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com