133 வீடுகள் கொண்ட தனியார் அடுக்குமாடி கட்டடத்தை 7 நாளில் இடிக்க நோட்டீஸ்

133 வீடுகள் கொண்ட தனியார் அடுக்குமாடிக் கட்டடத்தை 7 நாள்களில் இடிக்க கோவை மாநகராட்சி சார்பில் திங்கள்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

133 வீடுகள் கொண்ட தனியார் அடுக்குமாடிக் கட்டடத்தை 7 நாள்களில் இடிக்க கோவை மாநகராட்சி சார்பில் திங்கள்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
 கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 63 ஆவது வார்டு கள்ளிமடை சாலையில் தனியார் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் சுமார் 133 வீடுகள் 2004-05 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கனூரில் இருந்து சிங்காநல்லூர் குளத்துக்கு செல்லும் நீர்ப்பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடப்பட்டுள்ளதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் புகார் எழுப்பப்பட்டது.  
 மேலும் நீர்வழிப்பாதையில் பாலம் கட்டுவதாகக் கூறி பொதுப் பணித் துறையிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று தார் சாலை அமைத்துள்ளனராம். இதைத் தொடர்ந்து கூட்டுக் குடியிருப்பு கட்டுவதாக கூறி சென்னை நகர ஊரமைப்புத் துறை இயக்கத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. 
இது தொடர்பாக விவசாய சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நகர ஊரமைப்புத் துறை இயக்கத்தின் அனுமதியை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 இதையடுத்து கட்டட உரிமத்துக்கான மாநகராட்சியின் அனுமதியும் ரத்தானது. எனவே, மீண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க மாநகராட்சிஅறிவுறுத்தியது. ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பினர் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை. நீர்ப் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடத்துக்கான பட்டா நிலத்தில் குடியிருப்பு கட்டப்பட்டதால் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 
 இதைத் தொடர்ந்து உள்ளூர் திட்டக் குழுமத்தின் உத்தரவின்பேரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திங்கள்கிழமை நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அனுமதியின்றி கட்டப்பட்ட குடியிருப்பு 7 நாள்களுக்குள் இடிக்க வேண்டும்.  அவ்வாறு இடிக்கவில்லை என்றால் மாநகராட்சி சார்பில் இடிக்கப்பட்டு அதற்கான தொகையை வசூலிக்கப்படும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com