இந்து இயக்கப் பிரமுகர்களைக் கொல்ல சதி: கைதான 5 பேர் போலீஸ் காவல்  முடிவடைந்து சிறையிலடைப்பு

கோவையில் இந்து இயக்கப் பிரமுகர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய வழக்கில் கைதான 5 பேரின் போலீஸ்

கோவையில் இந்து இயக்கப் பிரமுகர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய வழக்கில் கைதான 5 பேரின் போலீஸ் காவல் முடிவடைந்து திங்கள்கிழமை சிறையிலடைக்கப்பட்டனர்.  
இந்து இயக்கங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக  கோவை, என்.எச்.சாலையைச் சேர்ந்த ஆர்.ஆஷிக் (25),  திண்டிவனத்தைச் சேர்ந்த எஸ்.இஸ்மாயில் (25), சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த இ.ஜாபர் சாதிக் அலி (29), பல்லாவரத்தைச் சேர்ந்த எஸ்.சம்சுதீன் (20), ஓட்டேரியைச் சேர்ந்த எஸ்.சலாவுதீன் (25) ஆகியோரை வெரைட்டிஹால் ரோடு போலீஸார் செப்டம்பர் 2 ஆம் தேதி கைது செய்தனர். 
 இந்த சதித்திட்டத்துக்கு உதவியதாக உக்கடம், ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஆட்டோ பைசல் (26), கரும்புக் கடையைச் சேர்ந்த அன்வர் (29) ஆகியோரையும் கைது செய்தனர். 
 சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (உபா),  கூட்டுச் சதி உள்ளிட்ட 7 பிரிவுகளில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் கைதான இஸ்மாயில் தடை செய்யப்பட்ட ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது. ஆகவே இந்த வழக்கில் கைதான 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து,  நீதிமன்ற உத்தரவின்பேரில் முதலில் கைதான 5 பேரையும் செப்டம்பர் 12-ஆம் தேதி நீதிமன்றக் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், இஸ்மாயிலை அவரது சொந்த ஊரான திண்டிவனத்துக்கு அழைத்துச் சென்று அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில், இஸ்மாயிலின் செல்லிடப்பேசி,  இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
  இந்த நிலையில், 4 நாள் நீதிமன்றக் காவல் முடிவடைந்து 5 பேரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.  அப்போது, இந்த வழக்கில் கைதான 7 பேரையும் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தும்படி மாவட்ட நீதிபதி (பொறுப்பு) எம். குணசேகரன் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
இதனிடையே, ஆட்டோ பைசல், அன்வர் ஆகியோரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com