இளம்பெண் கொலை வழக்கு: கேரள இளைஞருக்கு ஆயுள்

அன்னூரில் ஒருதலைக் காதலால் இளம் பெண்ணைக் கொலை செய்த வழக்கில் கேரள இளைஞருக்கு ஆயுள்

அன்னூரில் ஒருதலைக் காதலால் இளம் பெண்ணைக் கொலை செய்த வழக்கில் கேரள இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம்,  அன்னூரை அடுத்த தென்னம்பாளையம் சாலையைச் சேர்ந்தவர் தன்யா (23). பட்டதாரியான இவர் பொங்கலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், குத்தனூரைச் சேர்ந்தவர் ஹெச்.ஜாகீர் (32). இவர், அன்னூரில் உள்ள தேநீர் விடுதியில் பணியாற்றி வந்தார். அப்போது, தன்யாவை 
ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், தன்யாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.  இந்த நிலையில், தன்யாவை தனியாக வீட்டில் விட்டுவிட்டு அவரது பெற்றோர் 2016 செப்டம்பர் 14 ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர். இதன் பிறகு திரும்பி வந்து பார்த்தபோது ரத்தக் காயங்களுடன் தன்யா இறந்து கிடந்துள்ளார்.
 இதுகுறித்து தன்யாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தன்யாவின் வீட்டுக்குள் ஜாகீர் அத்துமீறி நுழைந்து, திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த ஜாகீர்,  தன்யாவைக் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதனிடையே, ஜாகீரும் சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்று செப்டம்பர் 15 ஆம் தேதி பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்த தகவலின்படி அங்கு சென்ற  அன்னூர் காவல் துறையினர் சிகிச்சைக்குப் பிறகு  அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  மேலும், கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் ஜாகீர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.  
கோவை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி எம்.குணசேகரன் புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார். 
இதில், கொலைக் குற்றத்துக்காக ஜாகீருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதமும், அத்துமீறி உள்ளே நுழைந்து கொலை செய்ததற்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்தார். 
  மேலும்,  தற்கொலை முயற்சிக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தார். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் கூடுதல் அரசு வழக்குரைஞர் வி.வி.நாகராஜன்ஆஜராகினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com