வியாபாரியைக் கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை

கோவை அருகே பழைய இரும்பு வியாபாரியைக் கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

கோவை அருகே பழைய இரும்பு வியாபாரியைக் கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம்,  ராதாபுரம் சீலாத்திக்குளத்தைச் சேர்ந்தவர் வன்னியராஜ் (34). அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (37), அவரது சகோதரர் ராமச்சந்திரன் (35). இவர்கள் மூவரும் கோவை க.க.சாவடி அருகே உள்ள மாவுத்தம்பதி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளனர். இவர்களது குடும்பத்தினர் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளனர். 
இந்நிலையில் மூன்று பேரும் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வந்துள்ளனர். அப்போது,  தங்கமணியின் மனைவிக்கும், வன்னியராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தங்கமணிக்கு தெரியவந்ததையடுத்து, வன்னியராஜுக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.  
க.க.சாவடியில் உள்ள வீட்டில் இவர்களுக்குள் 2013 மார்ச் 4 ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்,  ஆத்திரமடைந்த சகோதரர்கள் தங்கமணி, ராமச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து வன்னியராஜின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். மேலும் கொலையை மறைக்க அவரது உடலைத் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். 
இதுகுறித்து க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சகோதரர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை நான்காவது கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி, குற்றம்சாட்டப்பட்ட சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனையும்,  தலா ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு கூடுதல் வழக்குரைஞர் விஜயகுமார் ஆஜராகினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com