ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை: 3 மாதத்துக்குள் ஆய்வுகள் குறித்த அறிவிப்பு வரும்: அமைச்சர் க.பாண்டியராஜன்

ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையில் என்னென்ன தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன

ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையில் என்னென்ன தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்பு 3 மாதங்களில் வெளியாகும் என தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 கோவையில் உள்ள உற்பத்தித் திறன் குழுவின் வைர விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ஏ.எம்.நடராஜன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் கவிதாசன், செயலர் எஸ்.சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய தொழில் முனைவோரை உருவாக்கக் கூடிய நீட்ஸ் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ. 5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆண்டுக்கு 750 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைக் கண்டறிவதில் சிக்கல் ஏதும் இல்லை என்றாலும் ஆர்வம் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படுவதால் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
 ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முழுத் தொகையும் கடந்த மார்ச் மாதமே செலுத்தப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து, அங்கு எந்தெந்த தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பதற்கான ஆய்வறிக்கை அடுத்த 3 மாதங்களுக்குள் வெளியாகும் என நம்புகிறோம். மேலும், மலாய், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களிலும் இதேபோல எந்தெந்தத் தலைப்புகளில் ஆய்வுகள் நடத்துவது என்பது தொடர்பாக அதிகாரிகள் அளவிலான ஆலோசனை நடைபெறுகிறது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். குறித்து ஓர் ஆய்வும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் என்றார்.
 இந்நிகழ்ச்சியில், பெங்களூரு டிசால்வ் குரூப்பின் தலைவர் வி.வீரப்பன், அமைப்பின் துணைத் தலைவர் கே.அருள், பொருளாளர் அதியமான், இணைச் செயலர் கே.பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com