பாலமலை ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பாலமலையில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பாலமலையில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்திருப்பதி என்று போற்றப்படும் பாலமலையில் அரங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் பாலமலையில் உள்ள மாங்குழி, பசுமணி, பசுமணிபுதூர், குஞ்சூர்பதி ஆதிவாசிகள் முன்னிலையில் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கியது. பரம்பரை அறங்காவலர் யு.ஜெகதீசன் தலைமையில் காரமடை ஸ்ரீஅரங்கநாதர் கோயில் ஸ்தலத்தார் பட்டர் சுவாமிகள் கொடியேற்றி வைத்தார். 
தொடர்ந்து தினமும் அன்ன வாகனம், அநுமந்த வாகனம், கருட வாகனங்களில் மாடவீதிகளில் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். கடந்த புதன்கிழமை செங்கோதையம்மன் அழைப்பும், வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவமும் நடந்தன. முக்கிய நிகழ்வான திருத் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாயக்கன்பாளையம், கோவனூர் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர்.
கோவை வடக்கு எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர். ரங்கா, ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர். இதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பரிவேட்டை உற்சவம் சனிக்கிழமை நடந்தது. இதில் பெருமாள்திவ்ய அலங்காரத்தில் வெள்ளைக் குதிரை மீதேறி திருவீதி உலா வந்தார். அப்போது வழிப்பறிக்கொள்ளையராக இருந்த திருமங்கையாழ்வாரை ஆட்கொள்ளும் வைபவம் நடந்தது. 
விழாவில் அன்னதானமும், நாம சங்கீர்த்தன பஜனைகளும், இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. பெ.நா.பாளையம் சரக டி.எஸ்.பி மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com