வடமாநில தொழிலாளி கொலை: இளைஞர் கைது

மது அருந்த பணம் கொடுக்க மறுத்த வடமாநிலத் தொழிலாளியைக் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மது அருந்த பணம் கொடுக்க மறுத்த வடமாநிலத் தொழிலாளியைக் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை எட்டிமடை பகுதியில் உள்ள எல்லை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக கே.ஜி.சாவடி போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் தூக்கில் தொங்கிய உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டைகளை வைத்து அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சூரன் மார்கஸ் என்பதை போலீஸார் உறுதி செய்தனர். மேலும், வழக்கை சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அப்போது, சாவடிபுதூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் (24) என்பவருடன் சூரன் மார்க்ஸைப் பார்த்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் பிரபாகரனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, கொலை செய்ததை பிரபாகரன் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், வேலை முடிந்து வீடு திரும்பிய சூரன் மார்க்ஸிடம் மது அருந்த பிரபாகரன் பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பிரபாகரன் அவரைக் கல்லால் தலையில் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சூரன் மார்க்ஸ் உயிரிழந்துள்ளார்.
பின்னர், கொலையை மறைப்பதற்காக பிரபாகரன், அவரது உடலை பெல்ட்டால் கட்டி மரத்தில் தொங்கவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் கொலை வழக்காகப் பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com