கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு: ஹெச்.ராஜா

கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு: ஹெச்.ராஜா

கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
 கோவையில் 1998 பிப்ரவரி 14 ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
கோவை, ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, தேசிய தென்னைநார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 
பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா பேசியதாவது:
திருபுவனத்தில் பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகள் வேரறுக்கப்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. கூட்டணி குறித்து மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.  ஆட்சி கைநழுவிப் போவது உறுதி எனத் தெரிந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்றார்.
இந்நிகழ்ச்சியில், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், இளைஞரணி மாவட்டத் தலைவர் சுதாகர், ஆர்எஸ்எஸ் மாநகரத் தலைவர் ராஜன், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் தசரதன், செய்தி தொடர்பாளர் சி.தனபால், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலர் சிவலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து அனுமதியின்றி அஞ்சலி செலுத்தியதாக கூறி பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா, தேசிய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 500 பேரை போலீஸார் கைது செய்தனர். 
முன்னதாக காலையில் அனுமதியின்றி அஞ்சலி செலுத்தியதாக பாரத சேனா, ராமர் சேனா, இந்து பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த 180 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அனுமதியின்றி ஊர்வலம் சென்ற 150 பேர் கைது:  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜலகண்டேசுவரர் கோயிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு சர் சண்முகம் சாலை வழியாக வந்து குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக கூறி அர்ஜுன் சம்பத் உள்பட 40 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல அனுமதியின்றி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தியதாக அகில பாரத இந்து மகா சபாவின் மாநில இளைஞரணித் தலைவர் சுபாஷ் உள்ளிட்ட 110 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையத்தில்...
கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதற்கு மேட்டுப்பாளையம்  நகர் மன்ற முன்னாள் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். பாஜக நகரத் தலைவர் மனோஜ்குமார், இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், சதீஷ், மாவட்ட பொதுச்செயலாளர் வி.பி ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த், கோட்ட அமைப்பு செயலாளர் சதீஷ்குமார், பாஜக முன்னாள் கவுன்சிலர் கலைவாணி உள்பட 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com