பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் தந்தைக்கு மணிமண்டபம்: விவசாயிகள் மகிழ்ச்சி

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் தந்தையாக கருதப்படும் வேட்டைக்காரன்புதூர் வி.கே.பழனிச்சாமி

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் தந்தையாக கருதப்படும் வேட்டைக்காரன்புதூர் வி.கே.பழனிச்சாமி கவுண்டருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டம் ஆண்டுக்கு 70 அங்குலம் மழை பொழியும் ஆனைமலைப் பகுதியில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைத் தடுத்து, கிழக்கு நோக்கி திருப்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு 4.25 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற உதவும் திட்டமாகும்.  இத்திட்டம மூலம் 3 மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. 
பிஏபி திட்டத்தை முன்னாள் முதல்வர் காமராஜர் நிறைவேற்றினார். ஆனால், காமராஜருக்கு இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தினால், மூன்று மாவட்டங்கள் பயன்பெறும்; வீணாக அரபிக்கடலுக்கு செல்லும் தண்ணீர் விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கூறியவர் கோவை மாவட்டம், வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த வி.கே.பழனிச்சாமி கவுண்டர் ஆவார். இவர் பாரம்பரிய விவசாயி. ஆனைமலை மலையோரத்தில் விவசாயம் செய்து வந்த இவர் மலைவாழ் மக்களுடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளார். மலைவாழ் மக்கள் வாயிலாக ஆண்டுதோறும் பல டிஎம்சி தண்ணீர் வீணாக அரபிக்கடலுக்கு செல்கிறது என்பதையும் தெரிந்துகொண்டார். நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு, ஆழியாறு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு அங்குள்ள தண்ணீர், எந்தெந்த காலங்களில் கிடைக்கும் மழையினால் கிடைக்கிறது, எவ்வளவு தண்ணீர் கடலுக்கு செல்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தார். 
இதைத் தொடர்ந்து, பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை செயல்வடிவமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். 
காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக இருந்த இவர், 1952 ஆம் ஆண்டில் கோவில்பாளையம் சட்டப்பேரவை  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை சென்றவுடன் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை உருவாக்க கோரிக்கை வைத்தார். 
1957 இல் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1969 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டு காலம் மேலவை உறுப்பினராக பணியாற்றினார். சட்ட மேலவை துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை நிறைவேற்ற காமராஜரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். ஒரு காலகட்டத்தில் திட்டத்தை நிறைவேற்றவிட்டால் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், காமராஜர் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து புரிந்துகொண்டு பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை நிறைவேற்றினார். 
இந்நிலையில், பிஏபி திட்டம் கொண்டுவர முக்கிய காரணமாக இருந்த வி.கே.பழனிச்சாமி கவுண்டருக்கு வேட்டைக்காரன்புதூரில் மணிமண்டபம் கட்ட  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிஏபி திட்டக் குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறுகையில், "பிஏபி திட்டம் உருவாக முக்கிய நபராக இருந்தவர் வி.கே.பழனிச்சாமி கவுண்டர். இந்த திட்டம் மூலம் இன்று 4 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக நிலங்கள் பாசன வசதிபெறுகிறது. இந்நிலையில் இத்திட்டம் உருவாக காரணமாக இருந்த வி.கே.பழனிச்சாமி கவுண்டருக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com