கோவையில் ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப் பாய்ந்த காளைகளை

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப் பாய்ந்த காளைகளை இளைஞர்கள் அடக்கினர். போட்டியில் 746 காளைகளும், 599 மாடுபிடி வீரர்களும் களம் புகுந்தனர்.
கோவை மாவட்ட நிர்வாகம், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் செட்டிபாளையம் எல் அன்ட் டி புறவழிச்சாலை அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 2-ஆவது ஆண்டாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
இந்தப் போட்டிக்காக கோவை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, கரூர், அரியலூர், விருதுநகர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 750 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன.
களமிறங்கிய நட்சத்திரக் காளைகள்: போட்டியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கத் தலைவர் எஸ்.பி.அன்பரசன் ஆகியோரின் இரு காளைகளும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் பி.ராஜசேகரின் மூன்று காளைகளும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகளும் களமிறங்கின. 
இவற்றை மாடுபிடி வீரர்கள் நெருங்க முடியாத அளவுக்கு காளைகள் திறமையாக நின்று களமாடின. இதைத் தொடர்ந்து, அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனின் காளை களம் இறங்கியது. களத்தில் இறங்கிய சில நொடிகளிலேயே இந்தக் காளையை மாடுபிடி வீரர் ஒருவர் சுலபமாகப் பிடித்தார்.
பரிசுகள் குவிந்தன: அடக்க முடியாத காளைகளுக்கும், சிறப்பான மாடுபிடி வீரர்களுக்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சார்பில் 2 கிராம் தங்க நாணயம் பரிசாக அறிவிக்கப்பட்டது. 
இதேபோல 10 காளைகளை அடக்கும் வீரர்களுக்கு 3 சென்ட் இடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் முதலிடம்: அதிக காளைகளைப் பிடித்த வீரர்கள் பட்டியலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். 10-க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு வீட்டுமனை, கார், தங்க நாணயங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள்  வழங்கப்பட்டன.
இரண்டாமிடம் பிடித்த கண்ணனுக்கு இருசக்கர வாகனம், தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. 
மூன்றாமிடம் பிடித்த அஜய் என்பவருக்கு ஸ்கூட்டர், தங்க நாணயங்கள் அளிக்கப்பட்டன.
உசிலம்பட்டி காளைக்கு கார்: சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த விஜி என்பவரது காளைக்கு கார், தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.
இரண்டாமிடம் பிடித்த எம்.பி. ஆம்புலன்ஸ் நிறுவனத்தினரின் காளைக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. 
மூன்றாமிடம் பிடித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டது.
72 பேர் காயம்:  போட்டியில் பங்கேற்ற 70 மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் இருவர் காயமடைந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com