கூண்டில் சிக்கியது சிறுத்தை

கோவை அருகே கடந்த 2 மாதங்களாக ஊருக்குள் உலவி வந்த சிறுத்தை வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

கோவை அருகே கடந்த 2 மாதங்களாக ஊருக்குள் உலவி வந்த சிறுத்தை வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
மதுக்கரை வனச் சரகத்துக்கு உள்பட்ட பூலுவப்பட்டி, ஆலாந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி பூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி என்பவரது வீட்டில் இருந்த 4 ஆடுகள், 4 நாட்டுக் கோழிகள் கழுத்தில் கடிபட்ட நிலையில் இறந்துகிடந்தன.
 மேலும், கொட்டகையில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியையும் காணவில்லை. வனப் பகுதியில் இருந்து இந்த இடம் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததால் வெறிநாய்கள் ஏதேனும் ஆடு, கோழிகளைக் கடித்திருக்கும் என்று கருதப்பட்டது. இருப்பினும் உடல் பாகங்களை ஆய்வு செய்ததில் சிறுத்தை கடித்து அவை உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக ஆலாந்துறை கிராமத்துக்கு உள்பட்ட பெருமாள் கோவில்பதி என்ற இடத்தில் வனத் துறையினர் கடந்த 27-ஆம் தேதி கூண்டு வைத்திருந்தனர். கடந்த ஒரு மாதமாக கூண்டில் சிக்காமல் போக்குக் காட்டி வந்த சிறுத்தை, சனிக்கிழமை காலை கூண்டில் சிக்கியது. இதுகுறித்து வனத் துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற மதுக்கரை வனச் சரகர் செந்தில்குமார் உள்ளிட்ட வனத் துறையினர் சிறுத்தையைப் பார்வையிட்டனர்.
 கூண்டில் சிக்கியது சுமார் 6 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்றும் அது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிறுத்தையை வாகனம் மூலம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெங்குமரஹாடா வனப் பகுதிக்கு கொண்டு சென்று பிற்பகலில் அதை வனத் துறையினர் விடுவித்தனர்.
தொண்டாமுத்தூரை அடுத்த கரடிமடை வனப் பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வந்த ஆண் சிறுத்தையை வனத் துறையினர் இதேபோல் கூண்டு வைத்துப் பிடித்து சத்தியமங்கலம் வனப் பகுதியில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com