வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடக்கம்

டாப்சிலிப், முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. 


டாப்சிலிப், முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. 
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 7 கும்கி யானைகள் உள்பட 25 யானைகள் உள்ளன. வனப் பகுதிக்குள் இருந்து விவசாயப் பகுதிகளுக்குள் வந்து சேதம் செய்யும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவது, மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டுவது, காட்டு யானைகளைப் பிடிப்பது என பல்வேறு பணிகளில் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. 
சமீபத்தில் விவசாய தோட்டத்துக்குள் தஞ்சம் அடைந்த சின்னத்தம்பி யானை, கும்கி யானைகள் உதவியுடன்தான் பிடிக்கப்பட்டது. கும்கி யானைகள் தவிர சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்வதற்கும் வளர்ப்பு யானைகள் உள்ளன. இந்த வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் டாப்சிலிப்பில் சனிக்கிழமை துவங்கியது. வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு முகாமை துவக்கிவைத்தார். உடன், ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் கணேசன், மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, வனச் சரக அலுவலர்கள் நவீன்குமார், காசிலிங்கம், மணிகண்டன், வனவர் முனியாண்டி உள்பட பலர் இருந்தனர். இந்த புத்துணர்வு முகாம் தொடர்ந்து 48 நாள்களுக்கு நடைபெறும். 
முகாமில் யானைகள் தினசரி குளிப்பாட்டப்பட்டு அவற்றுக்குப் பிடித்தமான உணவான கரும்பு, வெல்லம், பழம், சத்துணவான ராகி களி, கொள் உருண்டை, அரிசி சாதம், சத்து மாத்திரைகள் என யானைகளின் உடல் எடைக்கு தகுந்தாற்போல் வழங்கப்படும். இதுதவிர பசுந்தீவனங்களும் வழங்கப்படும். 
கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சின்னத்தம்பி யானையையும் புத்துணர்வு முகாம் கணக்கில் சேர்த்து அதற்கும் மற்ற யானைகளுக்கு வழங்கப்படுவதுபோல் சத்தான உணவு வழங்கப்படவுள்ளது. அதேபோல், தேனி மாவட்டத்தில் வளர்க்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி  அனுப்பப்பட்டு ஆனைமலை வனத் துறை அலுவலகத்தில் உள்ள ரோகிணி யானையையும் புத்துணர்வு முகாமில் பங்கேற்க வைப்பதற்காக டாப்சிலிப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை  கொண்டு செல்லப்படவுள்ளது. 
 முதுமலை புலிகள் காப்பகத்தில்...
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் சனிக்கிழமை துவங்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் முதன்மை வனப் பாதுகாவலர் டாக்டர் எச்.மல்லேசப்பா, கள இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, உதவி இயக்குநர்கள் செண்பகப்பிரியா, புஷ்பாகரன், கூடலூர் மாவட்ட வன அலுவலர் ராகுல் மற்றும் வனச் சரக அலுவலர்கள், வன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com