இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்ற உத்தரவை  புறக்கணித்துப் போராட  முடிவு: ஜாக்டோ ஜியோ

இடைநிலை ஆசிரியர்களை மழலையர் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டதற்கான உத்தரவைப் புறக்கணித்து,

இடைநிலை ஆசிரியர்களை மழலையர் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டதற்கான உத்தரவைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடுவது என ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் 2,381 அங்கன்வாடி மையங்களில் அரசு சார்பில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி கோவை மாவட்டத்தில் 122 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. வகுப்புகள் வரும் 18ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன. இதில் மொத்தம் 2,748 குழந்தைகள் பயில இருப்பதாக ஏற்கெனவே கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. 
இந்தப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
கோவை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 283 பேர்கள் தேர்வு செய்யப்பட்டு மழலையர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இவர்களில் பெரும்பாலானோர் அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ளவில்லை.தங்களுக்கான புதிய பணி உத்தரவில் கையெழுத்திடாமல் புறக்கணித்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் இதைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். 
முன்னதாக கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள 15 வட்டாரங்களில் இடைநிலை ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தொடக்கப் பள்ளி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: 
தமிழக அரசின் உத்தரவை கண்டித்து ஜனவரி 18 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்வது,  கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தன்னிச்சையான நடவடிக்கையை கண்டித்து ஜனவரி 21 ஆம் தேதி முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது,  மழலையர் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாற்றம் செய்து பிறக்கப்பட்ட உத்தரவை புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், ஒருங்கிணைப்பாளர் வே.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com