கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சண்முக சுப்பிரமணியர் தேரோட்டம்

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில், சண்முக சுப்பிரமணியர் சுவாமி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில், சண்முக சுப்பிரமணியர் சுவாமி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சண்முக சுப்பிரமணியர் சுவாமி தைப்பூசத் திருவிழா கடந்த 18 ஆம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
 பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் கே.அர்ச்சுணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இந்தத் தேர், ஈஸ்வரன் கோயில் வீதி, பெருமாள் கோயில் வீதி, நாஸ் திரையரங்கம், டவுன்ஹால், பெரிய கடை வீதி வழியாக மீண்டும் நிலையை அடைந்தது.
 இதைத் தொடர்ந்து மாலையில் பரி வேட்டை, குதிரை வாகன திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. முன்னதாக காலை 8 மணி முதல் பிற்பகல் வரையிலும் தேரோடும் வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், சுக்கிரவாரப்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சிரவணபுரம் கெளமார மடாலய தண்டபாணிக் கடவுள் திருக்கோயில், காந்தி பூங்கா முருகன் கோயில் உள்ளிட்ட மாநகரில் உள்ள முருகன் திருத்தலங்களில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்...
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
விழாவையொட்டி,  நல்லகாத்து மைதானத்தில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், சிறுவர்கள்,  பெரியவர்கள் என பலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 
இந்த ஊர்வலத்தை காண சாலை இரு புறங்களிலும் திரளான பொதுமக்கள் கூடியிருந்தனர். இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கு நகர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியை வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு,  கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வால்பாறை அமீது, துணைத் தலைவர் மயில்கணேசன் ஆகியோர் துவக்கிவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com