கோவையில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி: ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு

கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம்

கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். 
சீட்டு நடத்தி மோசடி
இதுகுறித்து போத்தனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
கோவை, போத்தனூர், சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தலா ரூ. 5 லட்சம் முதல் ரூ.25 ஆயிரம் வரையில் எனப் பல தொகைகளில் சீட்டு சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். ஆனால்,  சீட்டு முடிவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும், நிதி நிறுவனத்தினர் பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது நிதி நிறுவனத்தை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் ரொனால்டு ரீகன், டேவிட் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். 
எனவே மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து  எங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுத் தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
 விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை...
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனு:
இந்தியாவில் காலநிலை, நீர் நிலைக்கு ஏற்ப விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் அதிக நிலப் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இயற்கை சீற்றம், தட்பவெப்ப நிலை, இடுபொருள்களின் விலை உயர்வு, ஆள்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயம் செய்வது சவாலாக உள்ளது. இந்நிலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பயிர்களுக்கான குறுகிய காலக் கடன், நீண்டகால கடன், பொருளீட்டு கடன் பெற்று விவசாயம் செய்து வந்த நிலையில் சில காரணங்களால் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 
இதனால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆகவே, பல்வேறு தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல மத்திய, மாநில அரசுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விவசாய இடுபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போல, உற்பத்தி செய்யப்படும் விளைப் பொருள்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.  விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com